கரோனா வைரஸ் கையாளுதல் விவகாரம்: இஸ்ரேலில் மக்கள் கொந்தளிப்பு- போலீஸ் மீது மிளகுப்பொடி வீச்சு

கரோனா வைரஸ் கையாளுதல் விவகாரம்: இஸ்ரேலில் மக்கள் கொந்தளிப்பு- போலீஸ் மீது மிளகுப்பொடி வீச்சு
Updated on
1 min read

உலகம் முழுதும் கரோனா வைரஸைக் கையாள்வதில் விரல்விட்டு எண்ணக்கூடிய அரசுகளைத் தவிர மற்ற அரசுகள் கரோனாவைக் கையாளுதலில் சிக்கி சின்னாபின்னாமாகி வருகின்றன. அதோடு புள்ளிவிவரங்களை மறைப்பது, ஊழல் போன்ற விவகாரங்கள், லாக்டவுன், பொருளாதார நசிவு ஆகியவை மக்களிடையே ஆங்காங்கே கொந்தளிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் இஸ்ரேலில் ஜெரூசலேமில் சனிக்கிழமையன்று பிரதமர் பெஞ்சமின் நெதன்ஹாயு இல்லத்துக்கு முன்னாலும் டெல் அவிவில் உள்ள பூங்கா ஒன்றிலும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் களத்தில் குதித்தனர்.

போலீஸ் அனுமதியுடன் தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆனால் சாலை மறியல் என்ற அளவுக்கு போன போது போலீஸார் தடியடி, தண்ணீர்பீய்ச்சி அடித்தல் நடவடிக்கைகள் மூலம் கும்பலை அடக்கினர்.

ஆர்ப்பாட்டக்காரர்களும் போலீஸ் மீது மிளகுப்பொடியைத் தூவினர். இதனையடுத்து பலர் கைது செய்யப்பட்டனர்.

சமீப காலங்களாக நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இஸ்ரேலில் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனடியடுத்து அங்கு புதிய முடக்க உத்தரவுகள் அமலில் உள்ளன இதனால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இஸ்ரேல் மக்கள் தொகை 90 லட்சமாகும் எனவே இங்கு கட்டுப்படுத்துவது எளிதுதான் என்று பிரதமர் நெதன்ஹாயு கூறிவருகிறார்.

மக்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த பிரதமர் அனைவருக்கும் பணம் கொடுக்க முடிவெடுத்தார். பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் ரொக்க உதவி செய்ய வேண்டுமே தவிர நாடு முழுதுமா ரொக்கம் கொடுப்பார்கள்? என்று சிலர் பிரதமரை விமர்சித்தும் வருகின்றனர்.

நாடு முழுதும் ரொக்கம் கொடுக்க பணம் உள்ளது, ஆனால் கரோனா மருத்துவப் பரிசோதனைகள் போதிய அளவில் இல்லை இது ஏன் என்று அங்கும் சில வல்லுநர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல்களும் அங்கு வலுத்து வருகின்றன.

இன்றும் ஜெருசலேமில் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை நடக்கிறது. ஆனால் நீதிமன்றத்தில் நெதன்யாஹு ஆஜராஜகப் போவதில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in