

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,234 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நோய்த் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய நோய்த் தடுப்பு மையம் தரப்பில், “ ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 84 மாகாணங்களில் 6,324 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாஸ்கோவில் அதிகபட்சமாக 578 பேருக்குக் கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இதுவரை 7,65,473 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பலி எண்ணிக்கை 12,247 ஆகப் பதிவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் மொத்தமாக 1.4 கோடி பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 85 லட்சம் பேர் வரை மீண்டுள்ள நிலையில், 6 லட்சம் பேர் இறந்துள்ளனர். கரோனா பாதிப்பில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,78,138 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1,42,276 ஆகவும் உள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் இதுவரையில் 20 லட்சம் பேருக்கு மேல் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 77 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் தொற்று எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. 25,664 பேர் பலியாகியுள்ளனர்.
4-வது இடத்தில் ரஷ்யா உள்ளது. சில நாட்களுக்கு முன்பாக கரோனா தடுப்பு மருந்துக்கான அனைத்துக் கட்டப் பரிசோதனை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகவும், ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ரஷ்யா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது