

கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ், உலக நாடுகளின் செயல்பாட்டைக் கடுமையாக முடக்கியுள்ளது.
இந்த நிலையில் பல்வேறு நாடுகள் கரோனாவுக்குத் தடுப்பூசி மருந்து கண்டறியும் சோதனையில் இறங்கியுள்ளன. அந்த வகையில் சீனாவின் மருந்து நிறுவனமான சினோபார்முடன் இணைந்து ஐக்கிய அரபு அமீரகம் கரோனாவுக்கு மருந்து கண்டறியும் சோதனையில் மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து 15,000 தன்னார்வலர்களுக்கு மருந்தைச் செலுத்தும் முயற்சியில் ஐக்கிய அரபு அமீரகம் இறங்கியுள்ளது.
இதுகுறித்து சினோபார்ம் மருந்து நிறுவனத்தின் தலைவர் ஜிங்ஜின் கூறும்போது, “இந்த மருத்துவப் பரிசோதனையை வெற்றிகரமாக முடிக்க நாங்கள் ஐக்கிய அரபு அமீரகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றுவோம். மேலும், இந்தத் தடுப்பூசியை உலக அளவில் தேவைப்படும் மக்களுக்குக் கிடைக்கச் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
இரட்டைப் பாதுகாப்பு
கரோனா தொடர்பான தங்கள் ஆராய்ச்சி முன்னேற்றம் கண்டுள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரிட்டன் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கரோனா தடுப்பூசி ஆராய்ச்சியில் இரட்டைப் பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய மருந்தைக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனை மனிதர்களுக்குச் செலுத்தும் மூன்றாம் கட்ட ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர்.
தன்னார்வலர்களிடம் ரத்த மாதிரிகள் பெறப்பட்டு அதில் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அம்மருந்துகள் ரத்தத்தில் எதிர்ப்பு சக்தியினை உற்பத்தி செய்கின்றன. மேலும், இந்தத் தடுப்பு மருந்து “killer T-cells” உருவாக்கும். இதன் மூலம் மனித உடலில் ஆண்டுக்கணக்கில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அமீரகம், பிரிட்டன் மட்டுமல்லாது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கரோனாவுக்குத் தடுப்பூசி மருந்தைக் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுள்ளன.
ரஷ்யா சில நாட்களுக்கு முன்பாக கரோனா தடுப்பு மருந்துக்கான அனைத்துக் கட்டப் பரிசோதனை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகவும், ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது