அமெரிக்காவுக்குப் பிறகு இந்தியாவில்தான் அதிக கரோனா மருத்துவப் பரிசோதனைகள்: வெள்ளை மாளிகை தகவல்

அமெரிக்காவுக்குப் பிறகு இந்தியாவில்தான் அதிக கரோனா மருத்துவப் பரிசோதனைகள்: வெள்ளை மாளிகை தகவல்
Updated on
1 min read

அமெரிக்கா 4 கோடியே 20 லட்சம் பேருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளது, அதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவில் 1 கோடியே 20 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 லட்சத்தைக் கடந்தது. 1 லட்சத்து 38,000 பேர் மரணமடைந்துள்ளனர்.

உலக அளவில் 1 கோடியே 36 லட்சம் பேர்களுக்கு கரோனா பாதித்துள்ளது. இதில் 5,86,000 பேர் பலியாகியுள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கேய்லீ மெகெனானி கூறும்போது, “கரோனா மருத்துவப் பரிசோதனையைப் பொறுத்தவரை நாங்கள் 42 மில்லியன் மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துள்ளோம். இரண்டாவது இடத்தில் அதிக கரோனா சோதனையில் இந்தியா 12 மில்லியன் பேருக்கு சோதனை நடத்தியுள்ளது. நாங்கள்தான் இதில் முன்னிலை வகிக்கிறோம்.

2009-ல் ஒபாமா-பிடென் கூட்டணி ஆட்சியில் எச்1 என்1 ஃப்ளூவின் போது மாநிலங்கள் டெஸ்ட்டிங்கை நிறுத்தவும் தனிப்பட்ட நோய் பாதிப்பு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

ஆனால் மாறாக தற்போதைய அதிபர் ட்ரம்ப் கரோனா பரிசோதனையில் உலகில் முன்னிலை வகிக்கிறார். வென் ட்டிலேட்டர்களிலும் அமெரிக்கா ட்ரம்ப் தலைமையின் கீழ் முன்னிலை வகிக்கிறது. 13 வாக்சின்களில் ஒன்று 3ம் கட்ட மருத்துவப் பரிசோதனைக் கட்டத்திற்குச் சென்றுள்ளது. மருந்தின் பயன்கள் அசாதாரணமானதாகவும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும் உள்ளது.

ஒபாமா-பிடென் செய்தது போல் இப்போது மருத்துவச் சோதனையையே வேண்டாம் என்று கூறவில்லை. அது வெட்கங்கெட்ட முடிவு. வாக்சின் தரப்பிலிருந்தும் உற்சாகமான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

மாடர்னா வாக்சின் நம்பிக்கையூட்டுகிறது. ஆய்வில் பங்கேற்ற 45 பங்கேற்பாளர்களுக்கும் நல்ல பயனளித்துள்ளது. இந்த மாத இறுதியில் மாடர்னா வாக்சின் 3ம் கட்ட சோதனை நிலையில் 30,000 பேருக்கு நடத்தப்படவுள்ளது.

அதே போல் கரோனா மருந்திலும் பிளாஸ்மா சிகிச்சையின் உயிர் பொறியியல் வடிவிலான மொனோகுளோனல் ஆன்ட்டி-பாடி ஊக்கமளித்து வருகிறது. ஆகவே மருந்துகள் பிரிவிலும் ஊக்கமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன” இவ்வாறு கூறுகிறார் வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கேய்லி மெகெனானி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in