

இந்திய - சீன ராணுவ தளபதிகள் நிலையில் நடைபெற்ற 4-ம் சுற்றுபேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா தரப்பில் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை புதன்கிழமை நள்ளிரவு 2 மணி வரை சுமார் 15 மணி நேரம் நடந்தது.
ஏற்கெனவே நடந்த 3 சுற்று பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பொதுக் கருத்தை மேலும் தெளிவுபடுத்தி அவற்றை அமல்படுத்துவது பற்றி இந்த பேச்சு நடந்தது என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனியிங் கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, ‘‘சீனா - இந்தியா எல்லையின் மேற்கு பகுதியில் பதற்றமான சூழலை தணிக்கவும் படை வீரர்களை மேலும் வாபஸ் பெறுவது தொடர்பாகவும் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
இதனிடையே கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட்ஸ்பிரிங்ஸ், கோக்ரா சாவடி உள்ளிட்ட இதர பகுதிகளில் இருந்து முழுமையாக தமது படை வீரர்களை வாபஸ் பெற சீனா ஒப்புக்கொண்டுள்ளது. ஃபிங்கர் பகுதியில் இருந்து படைவீரர்களை முழுமையான அளவில்வாபஸ் பெற சீனா தயக்கம் காட்டுகிறது. எனவே, ஃபிங்கர் 8 பகுதியில் குறைந்த எண்ணிக்கையில் தமது படை வீரர்கள் இருக்க வேண்டும் என்று சீனா விரும்புகிறது. எனினும், ஃபிங்கர் 4 பகுதியில் அமைத்திருந்த கட்டமைப்புகளை சீனா தகர்க்கும் வேலையை மேற்கொண்டுள்ளது.
ஏப்ரல், மே கால கட்டத்தில் நிலைகொண்டிருந்த நிரந்தர பகுதிக்கு இருதரப்புமே தமது படைகளை நகர்த்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எந்த முடிவையும் ஏற்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக சீனாவிடம் தெளிவுபடுத்திவிட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.