Published : 16 Jul 2020 09:48 PM
Last Updated : 16 Jul 2020 09:48 PM

2036-ம் ஆண்டுவரை அதிபராகத் தொடரும் புதினின் நியமனத்துக்கு எதிராகப் போராட்டம்

2036 ஆம் ஆண்டுவரை ரஷ்யாவின் அதிபராகத் தொடரும் உத்தரவில் புதின் சமீபத்தில் கையெழுத்திட்டார். இந்த நிலையில் இந்த நியமனத்துக்கு எதிராக தலைநகர் மாஸ்கோவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் அதிபர் புதினின் பதவி நீட்டிப்பு நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆங்கிலத்தில் ‘N0’ என்று எழுதப்பட்ட முகக் கவசத்தை அணிந்து வந்த போராட்டக்காரர்கள் புதின் தனது பதவியை ராஜினாமா செய்யும்படி முழக்கமிட்டனர்” என்று செய்தி வெளியானது.

இந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களையும் போலீஸார் கைது செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் அதிபர் பதவியில் இருப்பவர், தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அப்பதவியில் நீடிக்க முடியாது. இந்த நிலையில் புதின் ரஷ்யாவில் செல்வாக்குமிக்க நபராகத் தொடர்வதால், அவரை அதிபர் பதவியில் மேலும் தொடர வைப்பதற்கான சட்டத் திருத்தத்திற்கான தீர்மானம் அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் மக்களின் விருப்பத்தை அறிய இது தொடர்பாக ஒருவார வாக்கெடுப்பு நாடு முழுவதும் நடந்தது. இதில் 77.93% பேர் ரஷ்ய அதிபராக புதின் 2036-ம் ஆண்டு வரை தொடர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், 21.6% பேர் மட்டுமே இதற்கு எதிராக வாக்களித்ததாகவும் அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து 2036-ம் ஆண்டுவரை தானே ரஷ்ய அதிபராக இருக்கும் உத்தரவில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டார் .

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x