ஹெச்-1பி விசா வழங்கத் தடை: ட்ரம்ப் உத்தரவுக்கு எதிராக 174 இந்தியர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : கோப்புப்படம்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : கோப்புப்படம்
Updated on
2 min read

அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த ஆண்டு இறுதிவரை வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்த வழங்கப்படும் ஹெச்-1பி விசா வழங்குவதைத் தடை செய்து அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக 174 இந்தியர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இந்த 174 இந்தியர்களில் 7 இந்தியச் சிறுவர், சிறுமிகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் ஏராளமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், மக்கள் பெரும் வேலையிழப்பைச் சந்தித்தனர். இதனால் அமெரிக்காவில் கடந்த இரு மாதங்களில் வேலையின்மை அளவு திடீரென அதிகரிக்கத் தொடங்கியது.

இதையடுத்து, கடந்த மாதம் 22-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஓர் உத்தரவைப் பிறப்பித்தார். அதன்படி, அமெரிக்காவில் ஐடி துறை நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் ஹெச்-1பி விசா, ஹெச்-1 விசா, எல்,எல்-1 விசா உள்ளிட்டவற்றை இந்த ஆண்டு இறுதிவரை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டார். உள்நாட்டு மக்களின் வேலைவாய்ப்பைக் காக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

ஹெச்-1பி விசா மூலம் பெரும்பாலும் இந்தியாவில் இருந்தும், சீனாவிலிருந்தும்தான் மென்பொறியாளர்கள் அமெரிக்காவுக்கு வேலைக்குச் சென்று வருகின்றனர். அதிபர் ட்ரம்ப்பின் இந்த திடீர் உத்தரவால், இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மென்பொறியாளர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அமெரிக்காவில் உள்ள 174 இந்தியர்கள் அதிபர் ட்ரம்ப் ஹெச்-1பி விசா தொடர்பாக பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட மாவட்ட நீதிபதி கேடான்ஜி பிரவுன், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, உள்துறை அமைச்சர் சாட் எப் ஒல்ப், தொழிலாளர் துறை அமைச்சர் எஜுனே ஸ்காலியா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

174 இந்தியர்கள் சார்பில் வழக்கறிஞர் வாஸ்டன் பானியாஸ் தாக்கல் செய்த மனுவில், “ஹெச்-1பி, ஹெச்4 விசா வழங்குவதைத் தடை செய்து பிறப்பித்த அரசின் உத்தரவு, அமெரிக்கப் பொருளதாாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும், பல்வேறு மக்களின் குடும்பத்தினரைப் பிரித்து வைக்கும். அதிபர் ட்ரம்ப்பின் இந்த உத்தரவு சட்டவிரோதமானது” எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த ஹெச்-1பி விசா தொடர்பான தடை உத்தரவை திரும்பப் பெறக்கோரி ஏராளமான எம்.பி.க்கள் தொழிலாளர் துறை அமைச்சர் ஸ்காலியாவை வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்க எம்.பி.க்கள் ஜாக்குயின் கேஸ்ட்ரோ, பாபி ஸ்காட், தொழிலாளர், கல்விக்குழு எம்.பி. காரென் பாஸ், கறுப்பினத்தவர்களின் பிரதிநிதி எம்.பி. ஜீடி சூ, ராவல் கிரிஜால்வா, வின்சென்ட் கோன்சாலேஸ், வெட்டே கிளார்க், லிண்டா ஆகிய எம்.பி.க்கள் கூட்டாக தொழிலாளர் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in