Last Updated : 16 Jul, 2020 11:58 AM

 

Published : 16 Jul 2020 11:58 AM
Last Updated : 16 Jul 2020 11:58 AM

அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்குத் தடை குறித்து சில வாரங்களில் முடிவு; வெள்ளை மாளிகை தகவல்: 24 எம்.பி.க்கள் ட்ரம்ப்புக்கு கடிதம்

சீனாவின் டிக் டாக், வீசாட் உள்ளிட்ட மொபைல் செயலிகளைத் தடை செய்யும் முடிவு குறித்து சில வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் டிக் டாக், வீசாட் உள்ளிட்ட சீனச் செயலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 24 எம்.பி.க்கள் அதிபர் ட்ரம்ப்புக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே கடந்த மாதம் 15-ம் தேதி ஏற்பட்ட மோதலில் இந்தியாவின் தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து, சீனாவின் 59 செயலிகள் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி இந்தியா தடை விதித்தது.

இந்தத் தடையை வரவேற்ற அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, இந்தியாவைப் போல், அமெரிக்காவிலும் சீனாவின் டிக் டாக் உள்ளிட்ட மொபைல் செயலிகளுக்குத் தடை விதிப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால், இதுவரை எந்த முடிவையும் அமெரிக்கா எடுக்கவில்லை.

இந்நிலையில் வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி மார்க் மெடோஸ் நேற்று அதிபர் ட்ரம்ப்புடன் அட்லாண்டா நகருக்கு விமானத்தில் சென்றார். அப்போது, அவர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த போது, சீனாவின் டிக் டாக் உள்ளிட்ட மொபைல் செயலிகளுக்கு அமெரிக்கா தடை விதிக்க முடிவு எடுத்துள்ளதா என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு மார்க் மெடோஸ் பதில் அளிக்கையில், “அமெரிக்காவில் சீனாவின் மொபைல் செயலிகளான டிக் டாக், ஷேர் சாட் உள்ளிட்ட செயலிகளுக்குத் தடை விதிப்பது குறித்து சில வாரங்களில் முடிவு எடுக்கப்படும், மாதங்கள் தள்ளிப்போடமாட்டோம். இதற்கு காலக்கெடு ஏதும் நாங்கள் விதிக்கவில்லை.

டிக் டாக், வீசாட் உள்ளிட்ட பிற செயலிகளால் அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா, அமெரிக்க மக்களின் தனிப்பட்ட விவரங்களை எடுக்கிறார்களா என்று ஏராளமான அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

24 எம்.பி.க்கள் கடிதம்

இதற்கிடையே குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 24 எம்.பி.க்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு டிக் டாக் செயலியைத் தடை செய்யக் கோரி கடிதம் எழுதியுள்ளனர்.

24 எம்.பி.க்கள் எழுதிய கடிதத்தில், “சீனாவின் 50 செல்போன் செயலிகளைத் தடை செய்து இந்தியா மிகச்சிறந்த முடிவை எடுத்துள்ளது. அதேபோல, அமெரிக்கச் சந்தையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய சீனாவின் செல்போன் செயலிகளான டிக் டாக், வீசாட், ஷேர் சாட் போன்ற செயலிகளுக்குத் தடைவிதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தச் சீனச் செயலிகளைப் பயன்படுத்தினாலே பயன்படுத்துவோரின் சுயவிவரங்களை நம்முடைய அனுமதியின்றி எடுத்துக்கொள்ளும். குறிப்பாக ஐபி அட்ரஸ், பயன்படுத்துவோர் இடம், பயன்படுத்துவோர் குறித்த விவரம், தேடுதல் விவரங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளும். வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு உங்கள் விவரங்களைத் தர விரும்பினால் சீனச் செயலிகளைப் பயன்படுத்துங்கள் எனத் தெரிவித்திருந்தார்.

இந்தச் செயலிகள் அனைத்தும் மக்களிடம் இருந்து விவரங்களைத் திருடி சீனாவுக்கு அளிக்கின்றன. இந்தச் செயலிகள் மூலம் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு நிச்சயம் அச்றுத்தல் இருக்கிறது. அமெரிக்க மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய இந்தச் சீனச் செயலிகளுக்கு அமெரிக்க அதிபர் தடை விதிக்க வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x