

உலக மக்கள்தொகை 2100-ம் ஆண்டில் 10 சதவீதம் அளவில் குறையும் என்று லான்செட் ஆய்வு தெரிவித்துள்ளது. குறிப்பாக ஜப்பான், தாய்லாந்து, சீனா, இத்தாலி, போலந்து, ஸ்பெயின், தென்கொரியா, போர்ச்சுகல் உட்பட 20 நாடுகளில் மக்கள்தொகை 50 சதவீதம் அளவில் குறையும் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
புகழ்பெற்ற மருத்துவ ஆய்விதழான ‘தி லான்செட்’ , 2100-ம் ஆண்டில் உலக நாடுகளின் மக்கள்தொகை, பிறப்பு விகிதம், தனிமனித ஆயுட்காலம், பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்த ஆய்வை வெளியிட்டுள்ளது. அதில் 2100-ம் ஆண்டில் உலக மக்கள்தொகை 10 சதவீதம் குறையும் என்றும், குறிப்பாக 20 நாடுகளில் மக்கள்தொகை 50 சதவீதம் அளவில் குறையும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளதாவது:
“தற்போது உலக மக்கள்தொகை 7.8 பில்லியனாக உள்ளது. 2064-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 9.7 பில்லியனாக உயரும். ஆனால், 2100-ம் ஆண்டில் மக்கள்தொகை 8.8 பில்லியனாக குறையும் என்று அந்த ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறப்பு விகிதம் கணிசமாகக் குறையும். வயதானவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும்.
இந்தியாவின் மக்கள் தொகை 138 கோடியிலிருந்து 109 கோடியாகக் குறையும். சீனாவின் மக்கள்தொகை 140 கோடியிலிருந்து 73 கோடியாகக் குறையும். அதேசமயம் ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள்தொகை அதிகரிக்கும். நைஜீரியாவின் மக்கள்தொகை 3 மடங்குக்கும் மேலாக உயரும். தற்போது நைஜீரியாவின் மக்கள்தொகை 20.6 கோடியாக உள்ளது. 2100-ம் ஆண்டில் மக்கள்தொகை 79 கோடியாக உயரும்.
தற்போது 32.5 கோடியாக இருக்கும் அமெரிக்காவின் மக்கள்தொகை 2062 ஆண்டில் 36.4 கோடியாக உயரும். அதன் பிறகு 2100-ல் 33.6 கோடியாக குறையும். பொருளாதார அடிப்படையில் 2035-ம் ஆண்டில் அமெரிக்காவின் இடத்தை சீனா பிடிக்கும். 2098-ல் மீண்டும் அமெரிக்கா முதல் இடத்தைப் பிடிக்கும்.
உலக மக்கள்தொகையில் சமமின்மையை ஏற்படுத்தும் வகையில் அடுத்த 80 ஆண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதம் குறையும்.
மேலும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2017-ம் ஆண்டில் 68.1 கோடியாக இருந்தது. 2100-ல் அது 40.1 கோடியாகக் குறையும். 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தனிமனித ஆயுட்காலம் உயரும். விளைவாக மொத்த மக்கள் தொகையில் கால் பகுதியினர் 65 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பார்கள்”.
இவ்வாறு லான்செட் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.