ஆண்டுக்கு 5,00,000 அகதிகளுக்கு புகலிடம்: ஜெர்மனி அறிவிப்பு

ஆண்டுக்கு 5,00,000 அகதிகளுக்கு புகலிடம்: ஜெர்மனி அறிவிப்பு
Updated on
1 min read

ஆண்டுக்கு 5 லட்சம் என்ற எண்ணிக்கையில், அகதிகளுக்கு புகலிடம் அளிக்கவுள்ளதாக ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜெர்மனிக்கு அகதிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டு துணைப் பிரதமர் சிக்மர் கேப்ரியேல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அரசு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், "ஆண்டுக்கு 5 லட்சம் அகதிகளுக்கு அடுத்த சில ஆண்டுகள் தொடர்ந்து புகலிடம் அளிக்க முடியும். இதில் எங்களுக்குச் சந்தேகமில்லை. இதைவிட எண்ணிக்கை அதிகமாகக் கூட இருக்கலாம்.

மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வறுமை மற்றும் போர் காரணமாக அதிக எண்ணிக்கையிலான அகதிகள் வந்துகொண்டே இருக்கின்றனர். எனவே, மற்ற ஐரோப்பிய நாடுகளும் நியாயமான அளவு அகதிகளுக்கு புகலிடம் அளிக்க முன்வர வேண்டும்.

ஆண்டுதோறும் ஏறத்தாழ 10 லட்சம் அகதிகளை ஏற்று அவர்களை ஜெர்மனி சமூகத்தினருடன் ஒருங்கிணைக்கிறோம். நாங்கள் பொருளாதார ரீதியாக வலுவான நாடு என்பதில் சந்தேகமில்லை எனவே, மற்ற ஐரோப்பிய நாடுகளை விட கூடுதலான அகதிகளை ஏற்றுக் கொள்கிறோம்.

ஆஸ்திரியா, ஸ்வீடன், ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகள் மட்டுமே அகதிகள் விஷயத்தில் நம்பிக்கை அளிக்கின்றன. எனவேதான் ஐரோப்பிய கொள்கைகளில் மாற்றம் வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்றார் அவர்.

ஜெர்மனியில் நடப்பு ஆண்டு மட்டும் 8 லட்சம் அகதிகளுக்கு ஜெர்மனி தஞ்சம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in