Published : 14 Jul 2020 04:43 PM
Last Updated : 14 Jul 2020 04:43 PM

பிரிட்டனில் குளிர்காலத்தில் கரோனாவால் 1.2 லட்சம் பேர் வரை உயிரிழக்கக்கூடும்: ஆய்வில் எச்சரிக்கை

பிரிட்டனில் இவ்வருட இறுதியில் வர இருக்கும் குளிர்கால மாதங்களில் கரோனா தொற்றால் சுமார் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரிட்டனின் அகாடமி ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தொற்று எண்ணிக்கை அடிப்படையிலும், இறப்பு எண்ணிக்கை அடிப்படையிலும் ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன் முதன்மையான இடத்தில் உள்ளது. இந்நிலையில் வர இருக்கும் குளிர்கால மாதங்களில் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். இதனைத் தொடர்ந்து இறப்பு எண்ணிக்கை தற்போது இருப்பதைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

வரும் செப்டம்பர் முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரையிலான ஒன்பது மாதங்களில் 1.2 லட்சம் பேர் கரோனாவால் உயிரிழக்கூடும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக அந்த அறிக்கையைத் தயாரித்தவர்களில் ஒருவரான பேராசிரியர் ஸ்டீபன் ஹோல்கேட் கூறுகையில், ''குளிர்காலத்தில் மக்கள் ஒரே இடத்தில் அடைந்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதால் நோய்த்தொற்று மிக வேகமாகப் பரவும். விளைவாக நோய்த் தொற்று எண்ணிக்கை தற்போது இருப்பதைவிட இரண்டு மடங்கு அதிகம் உயரும். அந்த இரண்டாம் கட்டப்பரவல் தற்போது நாம் எதிர்கொண்டிருப்பதை விட அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். நாம் முறையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டால் இரண்டாம் கட்டப் பாதிப்பை குறைந்த அளவாவது தடுக்க முடியும்'' என்று தெரிவித்தார்.

பிரிட்டனில் இதுவரையில் 2.9 லட்சம் பேர் அளவில் கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 44,830 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கரோனா தொற்று அதிகரிக்கும்போது மருத்துவமனைகள் நிரம்பி விடுவதற்கான அபாயம் இருக்கிறது. எனவே தற்போதே அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x