

ரஷ்யாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,33,699 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய நோய்த் தடுப்பு மையம் கூறும்போது, “ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,537 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ரஷ்யாவில் கரோனாவால் 7,33,699 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 11,439 ஆகப் பதிவாகி உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் கடந்த ஒரு மாதமாகவே ஒவ்வொரு நாளும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தலைநகர் மாஸ்கோவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவுக்கு அடுத்து நான்காவது இடத்தில் ரஷ்யா உள்ளது. உலகம் முழுவதும் கரோனா வைரஸால் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸுக்குத் தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் சவாலாக இருந்து வருகிறது.
இந்நிலையில், உலகிலேயே முதல் முறையாக கரோனா வைரஸுக்குத் தடுப்பு மருந்தை வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மனிதர்கள் மீதான கிளினிக்கல் பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகவும், அவர்கள் மீது பரிசோதிக்கப்பட்டது வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும் ரஷ்யாவில் உள்ள செச்சினோவ் பர்ஸ்ட் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி தெரிவித்துள்ளது.