

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,222 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மருத்துவப் பல்கலைகழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூறும்போது, “கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 59,222 பேருக்குக் கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. 411 பேர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவில் கரோனா வைரஸால் இதுவரை 34,79,483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,35,582 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கரோனா தொற்று மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஒரு வாரமாக 60,000 வரை கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.
கரோனா பரவல் நீடித்து வந்தபோதிலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவில் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தேவாலயங்கள் ஆகியவை டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் புழக்கம் அதிகரித்தது.
குறிப்பாக கலிபோர்னியா, நியூயார்க், டெக்சாஸ், புளோரிடா மாகாணங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் விரைவில் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழியலாம் என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.