

‘வெளிப்படையான காற்றுத் தரநிலை தரவுகள்: உலகளாவிய நிலை’ என்ற தலைப்பில் வாஷிங்டனில் உள்ள ஓபன்ஏகியூ என்றசர்வதேச தன்னார்வ நிறுவனம் அண்மையில் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில், 212 நாடுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 103 நாடுகள் மட்டுமே முக்கிய மாசுக்கள் தொடர்பான காற்றுத்தரநிலை தரவுகளை உருவாக்கி உள்ளன என்பதும் சீனா, இந்தியா, ரஷ்யா, பிலிப்பைன்ல், பிரேசில், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 109 நாடுகள் (51% நாடுகள்) எந்தவொரு முக்கிய மாசு தொடர்பாகவும் காற்றுத் தரநிலை தரவுகளை உருவாக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
உலகில் 10-ல் 9 பேர் அதிக மாசுக்கள் நிறைந்த காற்றை சுவாசிப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ள நிலையில், உலகின் பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்கு காற்றின் தரம் பற்றிய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் கிடைப்பதில்லை என ஆய்வறிக்கை கூறுகிறது.
இதுகுறித்து ஓபன்ஏகியூ நிறுவனர் கிறிஸ்டா ஹசென்கோஃப் கூறும்போது, “நாம் சுவாசிக்கும் காற்றை மேம்படுத்துவதற்கான முதல் படி, காற்றுத் தரநிலை தரவுகளை சிறந்த முறையில் வழங்குவதே ஆகும்” என்றார்.