

சிங்கப்பூரில் 45,961 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 பேர் இறந்துள்ளனர். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சிங்கப்பூரில் ஊரடங்கு கடந்த ஏப்ரல் 7-ம் தேதிமுதல் அமலுக்கு வந்தது. கடைகள்,வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. மற்றவர்களின் வீடுகளுக்குச் செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூன் 2-ம் தேதி ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் கடந்த மே 5-ம் தேதி சிங்கப்பூரில் கிம்கீட் சாலையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நவ்தீப் சிங், சஜன்தீப் சிங், அவினாஷ் கவுர் ஆகிய மாணவர்கள், ஒரு பெண் உட்பட 7 பேரை மது விருந்துக்காக அழைத்துள்ளனர். 10 இந்தியர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் ஒன்றாகக் கூடியுள்ளனர். இதையறிந்த போலீஸார் 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
அவர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் முதல் ரூ.2 லட்சத்து 43 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மாணவர்கள் உட்பட அந்த 10 பேரையும் இந்தியாவுக்கு நாடு கடத்திவிட்டதாகவும் மீண்டும் அவர்கள் சிங்கப்பூருக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கப்பூர் போலீஸாரும் குடியுரிமை அதிகாரிகளும் கூட்டாக விடுத்த அறிக்கையில் கூறியுள்ளனர்.