

நேபாளத்தில் கடந்த 4 நாட்களில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 60 பேர் பலியாகியுள்ளனர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் 41 பேரைக் காணவில்லை.
மேற்கு நேபாளத்தின் மயாக்டி மாவட்டத்தில் மட்டுமே 27 பேர் பலியாகியுள்ளனர்.
நிலச்சரிவினால் இடிந்த வீடுகளில் காணாமல் போனவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. வீடுகள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டதால் நூற்றுக்கணக்கானோர் வீடிழந்தனர். இவர்கள் தற்போது உள்ளூர் பள்ளிகளிலும் சமுதாயக் கூடங்களிலும் தங்கி உள்ளனர்.
இதுதொடர்பாக மயாக்டி மாவட்டவாசி ஒருவர் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “என் குழந்தைக்கு 6 வயதுதான் ஆகிறது. என் குடும்பத்தில் நானும் என் குழந்தையும் மட்டுமே உயிர் பிழைத்தோம். இப்போது பள்ளியில் தங்கியிருக்கிறோம். குழந்தையைக் கையில் அணைத்த படி வீட்டை விட்டு ஓடினேன். பெரிய நிலச்சரிவு வந்து கொண்டிருந்த பயங்கரம்..” என்றார்.
ஜூலை 12ம் தேதி நிலவரப்படி சுமார் 1000 பேர் இந்த ஆபத்தான பகுதிகளிலிருந்து வெளியேறினர். இவர்கள் பிறரின் உதவியை நாடி பள்ளிகளில் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர்.
இந்த வாரத்தின் முதல் 3 நாட்களுக்கு கன மழை முதல் அதிகனமழை பெய்யும் என்று நேபாள் வானிலை மையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.