Last Updated : 12 Jul, 2020 10:27 AM

 

Published : 12 Jul 2020 10:27 AM
Last Updated : 12 Jul 2020 10:27 AM

அமெரிக்காவின் மாயாஜால உலகமான வால்ட் டிஸ்னி பூங்கா மீண்டும் திறப்பு 

கரோனா பெருந்தொற்று காரணமாக நான்கு மாதங்களாக மூடப்பட்டு இருந்த அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வால்ட் டிஸ்னி பொழுதுபோக்குப் பூங்கா நேற்று திறக்கப்பட்டது.

உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்குப் பூங்காவான வால்ட் டிஸ்னி பூங்காக்கள் கலிபோர்னியா, புளோரிடா, பாரீஸ், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகிய ஆறு இடங்களில் உள்ளன. இவை அனைத்தும் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாகக் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. ஷாங்காய் டிஸ்னிலேண்ட் கடந்த மே 11 ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கரோனா நோய்த் தொற்றினால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டதால் அங்கு ஊடரங்கு நீட்டிக்கப்பட்டது. பிறகு மே மாதத்தில் நோய்த் தாக்கத்தின் தீவிரம் குறையத் தொடங்கியதும் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டிஸ்னிலேண்டின் மேஜிக் கிங்டம் மற்றும் அனிமல் கிங்டம் நேற்று திறக்கப்பட்டது. அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று டிஸ்னி நிர்வாகம் வலியுறுத்தி இருக்கிறது.

அது மட்டுமின்றி முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பூங்காவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு பூங்காவுக்குள் வந்துவிட்டு வேறு பூங்காவுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். நுழைவாயிலில் ஊழியர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்குத் தவறாமல் உடல் வெப்பநிலை சோதனை நடத்தப்படும். மக்கள் திரளை ஈர்க்கக்கூடிய வாணவேடிக்கை, பட்டாசு கண்காட்சி மற்றும் டிஸ்னி பொம்மைகளின் ஊர்வலம் ஆகியன தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் 2021 ஆம் ஆண்டு வரைக்குமான முன்பதிவு ஏற்கெனவே நிரம்பிவிட்டதாக டிஸ்னி பூங்காவின் தலைவர் ஜோஷ் டிஅம்ரோ தெரிவித்தார். டிஸ்னிலேண்டின் போட்டி பொழுதுபோக்குப் பூங்காக்களான யூனிவர்சல் ஸ்டுடியோஸ் மற்றும் சீவேர்ல்டு ஜூன் மாதம் தொடக்கத்திலேயே திறக்கப்பட்டுவிட்டன. ஆனால், தங்களுடைய ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி ஜூலை மாதத்தில்தான் மீண்டும் திறக்கப்போவதாக மே மாதத்திலேயே டிஸ்னி அறிவித்தது. அதன்படி அமெரிக்காவின் டிஸ்னிலேண்ட் நேற்று முதல் செயல்படத் தொடங்கியது.

புளோரிடா மாகாணத்தில் உள்ள மேஜிக் கிங்டம் மற்றும் அனிமல் கிங்டம் பூங்காக்களைத் தொடர்ந்து வரும் 15 ஆம் தேதி அன்று எப்காட் மற்றும் ஹாலிவுட் ஸ்டுடியோஸ் மீண்டும் திறக்கப்படவிருக்கின்றன. அதே நாளில் பாரிஸ் நகரத்தின் டிஸ்னிலேண்டும் திறக்கப்படவிருக்கிறது.

இந்த ஜூலையில் திறப்பு விழா காண இருந்த டிஸ்னிலேண்டின் ஆவெஞ்சர்ஸ் கேம்பஸ் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அடுத்து மார்வல் தீம் பார்க்கும் திறக்கப்படவிருக்கிறது என்பது தீம் பார்க் மற்றும் கார்ட்டூன் கதாபாத்திரப் பிரியர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

வால்ட் டிஸ்னி பூங்கா, டிஸ்னி லேண்ட், கரோனா ஊரடங்கு, கரோனா வைரஸ், கொரோனா வைரஸ், பொழுதுபோக்குப் பூங்கா, மாயாஜால உலகம், வால்ட் டிஸ்னி, மேஜிக் கிங்டம், டிஸ்னி பூங்கா, தீம் பார்க், கார்ட்டூன்,

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x