Published : 11 Jul 2020 07:49 PM
Last Updated : 11 Jul 2020 07:49 PM

திருமணங்களுக்குத் தடை; கொண்டாட்டத்துக்கு இது நேரமல்ல: ஈரான் அதிபர்

ஈரானில் கரோனா பரவல் அதிகமாகப் பரவுவதைத் தொடர்ந்து, அங்கு திருமணம் போன்ற பெரும் நிகழ்வுகளுக்குத் தடை விதிப்பதாக அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,397 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 188 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் இதுவரை 2,55,117 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,635 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் ஈரானில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் புதிய அறிவிப்பை ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “நாடு முழுவதும் நடக்க இருக்கும் பெரிய நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கிறோம். அது திருவிழாவாக இருந்தாலும் சரி, திருமணமாக இருந்தாலும் சரி, பயிலரங்கமாக இருந்தாலும் சரி. கொண்டாட்டத்திற்கு இது நேரம் அல்ல” என்று ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, முகக்கவசம் அணியாத ஈரானியர்களுக்கு அரசின் சேவைகள் மறுக்கப்படும் என்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றாத நிறுவனங்கள் ஒரு வாரம் மூடப்படும் என்றும் அதிபர் ஹசன் ரவ்ஹானி முன்னரே தெரிவித்திருந்தார்.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலையில் ஈரான் தலைநகரில் மட்டும் 20 சதவீதம் பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று ஈரான் கரோனா தடுப்புப் பணிக்குழுவின் தலைவர் அலிரேஸா சாலி தெரிவித்திருந்தார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஊரடங்குத் தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x