

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தால், சீனாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு எந்த வித உத்தரவாதங்களும் இல்லை என்று அமெரிக்க முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன் தெரிவித்துள்ளார்.
சீனா போர்க்குணத்துடன் செயல்பட்டு வருகிறது. தென் சீனக் கடல் பகுதி, ஜப்பானுடனான உறவு என்று இந்தியாவுடனான உறவு சரிந்து கொண்டே வருகிறது என்கிறார் போல்ட்டன்.
“இந்திய-சீன பதற்றம் அதிகரித்தால் அவர் எந்தப்பக்கம் சாய்வார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை, சீனாவுக்கு எதிராக இந்தியாவை ஆதரிப்பாரா என்பதும் உறுதியாகத் தெரியாது. அவருக்கே தெரியாது. சீனாவுடனான புவிசார் உறவை வாணிபம் என்ற கண்களின் வழியேதான் ட்ரம்ப் பார்ப்பார்.
நவம்பர் தேர்தலுக்குப் பிறகு ட்ரம்ப் என்ன செய்வார் என்று தெரியவில்லை. சீனாவுடனான பெரிய வாணிப ஒப்பந்தத்துக்குத் தயாராவார்..
எனவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சிக்கல்கள் அதிகரித்தால் அவர் எந்தப் பக்கம் சாய்வார் என்று தெரியாது.
மேலும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பிரச்சினையின் வரலாறு எதுவும் ட்ரம்புக்கு தெரியும் என்று நான் கருதவில்லை” என்றார் போல்ட்டன்.
இவர் தொடர்ந்து ட்ரம்புக்கு எதிராகப் பேசி வருவது குறிப்பிடத்தக்கது. உய்குர் முஸ்லிம்களின் ஆபத்பாந்தவனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் ட்ரம்ப், அவர்களை தடுப்புக்காவல் முகாமில் சீனா அடைப்பதற்கு ரகசியப் பச்சைக் கொடி காட்டியவர்தான் என்று தான் எழுதிய புத்தகம் ஒன்றில் ட்ரம்ப் காலை வாரியிருந்தது குறிப்பிடத்தக்கது.