

மும்பை தாராவி பகுதியில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு இரண்டுமே முதலிடத்தில் உள்ளன. குறிப்பாக மும்பையில்தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதி என்று பெயர் பெற்ற தாராவியும் மும்பையில்தான் உள்ளது.
முதலில் கரோனா வைரஸ் பரவலின் ‘ஹாட் ஸ்பாட்’ என்ற அளவுக்கு தாராவி சென்றது. ஆனால், வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் தாராவியில் வசிக்கும் மக்கள் முழு ஊரடங்கைக் கடைப்பிடித்ததும், பரிசோதனைக்கு பெரும்பாலானோர் ஒத்துழைப்பு அளித்ததும் மிகப்பெரிய பங்கு வகித்தது. மேலும் பல கட்டுப்பாடுகள் மூலம் தாராவியில் இப்போது வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாராவியில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது குறித்து உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தரப்பில், “கரோனா பரவல் மிகவும் தீவிரமாக இருந்தாலும், அதை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதற்கு உலகம் முழுவதிலுமிருந்து பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. இத்தாலி, ஸ்பெயின், தென் கொரியா, தாராவி ஆகிய பகுதிகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம். நோய்வாய்ப்பட்ட நோயாளிகளைக் கண்டறிதல், தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் ஆகியவை நோய்ப் பரவல் சங்கிலியை உடைக்கும்.
வளர்ந்த நாடுகளில் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்வதன் காரணமாக கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதைக் காண முடிகிறது. நமக்குத் தலைமைத்துவம், சமூகப் பங்களிப்பு, ஒற்றுமை அவசியம்” என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 7,93,802 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தாராவியில் 2,347 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.