Published : 11 Jul 2020 12:42 PM
Last Updated : 11 Jul 2020 12:42 PM

ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிராக உலக அளவில் கூடுதலாக 3.1 கோடி வன்முறை நிகழ்வுகள்: ஐ.நா. ஆய்வில் கணிப்பு

ஆறு மாத காலத்திற்கு ஊரடங்கு நீடிக்கும்போது பெண்களுக்கு எதிராக உலக அளவில் கூடுதலாக 3.1 கோடி வன்முறை நிகழ்வுகள் ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம் அண்மையில் நடத்திய ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது.

உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு மத்திய அரசு இன்று வெளியிட செய்திக்குறிப்பு:

''உலகமே கரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் மரணத்துக்கு அச்சப்பட்டுக் கொண்டிருக்கும்போது இன்று நாம் உலக மக்கள்தொகை தினத்தை நினைத்துப் பார்க்கின்றோம். இந்த 2020-ம் ஆண்டிலும் அடுத்த 2021-ம் ஆண்டிலும் உலக நாடுகளில் சுமார் 150 நாடுகளில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி நடக்க இருக்கின்றது. இந்தியாவில் 2021-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு புள்ளிவிவரங்கள் வெளியிடப்படவேண்டும். இந்நேரம் அது தொடர்பான பல வேலைகள் நடந்து இருக்க வேண்டும்; ஆனால் அனைத்தும் முடங்கி இருக்கின்றன.

தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியால் உலகமே தவித்துக் கொண்டிருக்கிறது மற்றும் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் சமச்சீராக இல்லாமல் அங்கும் இங்குமாக உள்ளன. அதாவது எல்லோரும் சமமான பாதிப்புகளை எதிர்கொள்வதில்லை. பாதிப்புகள் பிராந்தியத்துக்கு பிராந்தியம் நபருக்கு நபர் வேறுபடுகின்றன. உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களில் அதிக எண்ணிக்கையில் பெண்கள்தான் உள்ளனர். உலக அளவில் இவர்கள்தான் கரோனா தொற்றுக்கும் ஆளாகின்றனர். பல விதமான பிரச்சினைகளுக்கும் பெண்களே ஆட்படுகின்றனர்.

உலக மக்கள்தொகை தினத்தில் நாம் பெரும்பாலும் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலேயே கவனம் செலுத்துவோம். சிறுகுடும்ப நெறி, குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள், சட்டபூர்வமான திருமண வயது போன்றவை குறித்த விழிப்புணர்வும் ஆலோசனைகளும் விவாதங்களும் இந்த தினத்தில் வழக்கமாக இருக்கும். கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் காலத்தில் இதே விஷயங்களை நாம் வேறு கோணத்தில் பார்த்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

அதாவது கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் பெண்கள் மீதும் சிறுமிகள் மீதும் எந்த விதமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது என்பதை அலசிப் பார்க்க வேண்டும். உலகம் முழுவதும் நுகர்பொருட்கள் உற்பத்தியும் விநியோகச் சங்கிலித் தொடரும் பாதிக்கப்பட்டு இருப்பதால் கருத்தடை சாதனங்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. அதனால் விரும்பாத மற்றும் தேவையில்லாத கர்ப்பம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.

ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதாலும் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சுகாதாரத்துறை முழுவீச்சாக ஈடுபட்டிருப்பதாலும் பெண்களுக்கான பாலியல் மற்றும் இனப்பெருக்க மண்டல சுகாதாரச் சேவைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் பாலினப் பாகுபாடு சார்ந்த வன்முறைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. எனவேதான் இந்த ஆண்டு உலக மக்கள்தொகை தினத்திற்கான மையக்கருத்தாக ”கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைத் தடுத்தல்: பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆரோக்கியம் மற்றும் உரிமைகளை இப்போது எப்படிப் பாதுகாப்பது?” என்பது அறிவிக்கப்பட்டுள்ளது

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம்( UNFPA) கோவிட்-19 நெருக்கடி சூழலின் பின்னணியில் இந்த உலக மக்கள்தொகை தினத்தில் கீழ்வரும் அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது:

1. விரும்பாத மற்றும் தேவையற்ற கர்ப்பம்
2. பாலினப் பாகுபாடு அடிப்படையில் பெண்கள் மீதான வன்முறை
3. குழந்தைத் திருமணம்
4. பெண் பிறப்புறுப்பில் வெளிப்புறத்தை நீக்குதல்

இவை எல்லாமே பெண்களின் உரிமைகள் சார்ந்த விஷயங்கள் ஆகும். அதிலும் குறிப்பாக பெண்களின் பாலியல் உரிமை மற்றும் இனப்பெருக்க மண்டல உரிமைகளாகும். பாலினப் பாகுபாடு துலக்கமாக இருக்கும் இந்தியாவில் பெண்களின் இந்த உரிமைகள் பொதுவாகவே கவனம் பெறுவதில்லை. கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் தடுப்பிற்கு முக்கியத்துவம் தரப்படும் இச்சூழலில் இந்த உரிமைகள் புறக்கணிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. இந்தத் தினத்தில் பெண்களின் இத்தகைய உரிமைகள் எல்லாக் காலத்திலும் எல்லா சூழல்களிலும் பாதுகாக்கப்பட வேண்டியவை என வலியுறுத்தப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம் அண்மையில் நடத்திய ஆய்வில் மூன்று மாத காலத்துக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டு ஓரளவு பொதுச் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தால் உலக அளவில் 3 லட்சத்து 25 ஆயிரம் தேவையற்ற கர்ப்பம் உருவாகும் என்றும் இதே 12 மாத காலத்திற்கு ஊரடங்கு விதிக்கப்பட்டு அதிக அளவில் பொதுச் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டால் 1.5 கோடி தேவையற்ற கர்ப்பம் உருவாகும் என்றும் கணக்கிட்டுள்ளது. தற்போது தேவையில்லாத மற்றும் தனக்கு விருப்பமில்லாத கர்ப்பத்தை ஒரு பெண் எதிர்கொள்வது மிகப் பெரிய பிரச்சினையாகும். கோவிட்-19 சூழலில் கருக்கலைப்பும் எளிதல்ல. கோவிட்-19 பெண்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளில் தேவையற்ற கர்ப்பமே முக்கியமான/ முதன்மையான பாதிப்பு என்றே சொல்லலாம்.

ஊரடங்கும் அதையொட்டி நடமாட்டமும் இல்லாததால் பெண்கள் வீட்டிலேயே முடக்கப்பட்டு உள்ளனர். இதனால் குடும்பத்தாரின் வன்முறைக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாகக் கணவர்களால் (intimate partners) வன்முறைக்குப் பெண்கள் ஆளாவது அதிகரிக்கலாம். சுமார் 60% பெண்கள் அமைப்பு சாராத பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வறுமையில் வாடும் அபாயம் உள்ளது. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருப்பதால் முழு நேரமும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது மற்றும் முதியவர்களை வீட்டுக்குள்ளேயே வைத்துப் பராமரிக்க வேண்டியது ஆகியவற்றால் பெண்களின் வீட்டுப் பராமரிப்பு வேலைகளும் நேரமும் அதிகரித்துள்ளன.

ஆறு மாத காலத்திற்கு ஊரடங்கு நீடிக்கும்போது பெண்களுக்கு எதிராக உலக அளவில் கூடுதலாக 3.1 கோடி வன்முறை நிகழ்வுகள் ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்குமேல் ஊரடங்கு நீக்கப்பட்டால் ஒவ்வொரு மூன்று மாத காலத்துக்கும் கூடுதலாக 1.5 கோடி பாலினப் பாகுபாடு சார்ந்த வன்முறைகள் பெண்களுக்கு எதிராக நிகழக்கூடும்.

குழந்தைத் திருமணம் என்பதும் ஒரு வகையான பெண்களுக்கு எதிரான வன்முறைதான். பெண் குழந்தையின் வளர்ச்சிக்கான அனைத்து வாய்ப்புகளையும் நிராகரித்து விட்டு அவளை இளம் வயதிலேயே ”மனைவி”யாக்கும் வன்முறைதான் குழந்தைத் திருமணம் ஆகும். அனைத்து உரிமைகளும் கவனமும் கோவிட்-19 மீதே குவிந்து இருக்கும்போது குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. அவ்வாறு பார்த்தால் 2020 முதல் 2030 வரையான பத்து ஆண்டு காலகட்டத்தில் உலக அளவில் கூடுதலாக 1.3 கோடி குழந்தைத் திருமணங்கள் நடக்கக்கூடும் என்று மக்கள்தொகை நிதியம் கணக்கிட்டுக் கூறியுள்ளது.

பெண்ணுடலையும் பெண்ணின் பாலியல் விழைவையும் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக மேற்கொள்ளப்படும் கொடுமையான வன்முறைதான் பெண்ணின் பிறப்புறுப்பில் வெளிப் பாகத்தை வெட்டி விடும்( Female Genital Mutilation-FGM) நிகழ்வாகும். ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் இது சாதாரணமாக நிகழ்த்தப்படுகிறது. அடுத்த பத்தாண்டில் 2 மில்லியன் பெண்ணுறுப்பு வெளிப்பாக நீக்கும் நிகழ்வுகள் உலக அளவில் நடக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்கும் பெண்களில் சுமார் 20 கோடி பெண்கள் தங்கள் சிறுவயதில் இந்த பிறப்புறுப்பு வெளிப்பாக நீக்கும் நிகழ்வுக்கு ஆட்பட்டு இருந்தவர்கள்தான்.

உலக மக்கள்தொகை நிலைமை 2020 அறிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம் அண்மையில் உலக மக்கள்தொகை நிலைமை 2020 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. ”எனது விருப்பத்துக்கு எதிராக: பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் மற்றும் பாலின சமத்துவத்தைக் குலைக்கும் நடைமுறைகள்” என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 19 நடைமுறைகள் பெண்களுக்கு தீங்கு இழைப்பதாக இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இந்த நடைமுறைகளில் ஒன்றோ, பலவோ உலக நாடுகள் முழுவதுமே கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்த நடைமுறைகளைத் தங்கள் மகள்கள் மீது தெரிந்தே பிரயோகிக்கின்றனர். இவை பாலினச் சமத்துவமின்மை என்பதில்தான் காலூன்றி நிற்கின்றன. பெண்களின் உடல்களையும் பாலியல் மற்றும் பாலின்ப விழைவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன்தான் இந்த நடைமுறைகள் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகின்றன. கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலானது இந்த நடைமுறைகளை அதிகரிக்க வழிவகுக்கும்.

உலக மக்கள்தொகை தினத்தில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளைப் பேசாமல் பெண்கள் குறித்து பேசுவது ஏன் என்ற கேள்வி எழும். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துதல் என்பது சட்டத்தால், நிர்பந்தத்தால், வலியுறுத்தலால் அல்லது தேவையால் ஏற்படுத்த முடியாது. பெண்களால்தான் இதைச் சாத்தியமாக்க முடியும். ஆனால் அதற்குப் பெண்களுக்குப் பாலியல் மற்றும் இனப்பெருக்க மண்டல உரிமைகளும் எழுத்தறிவும் இருக்க வேண்டும். பாலினச் சமத்துவம் நிலவும் சமுதாயத்தில்தான் மற்றும் தன் உடல்மீது பெண்களுக்கு முழு உரிமை இருக்கும் சமுதாயத்தில்தான் மக்கள்தொகை தேவைக்கு ஏற்பக் கட்டுக்குள் இருக்கும். எனவே கோவிட்-19 நெருக்கடிக்கு அப்பாலும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்கு இந்த நேரத்தில் நாம் முக்கியத்துவம் கொடுத்தாகவேண்டும். அதற்காகத்தான் இந்த ஆண்டின் உலக மக்கள்தொகை தினம் இவர்களைக் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது''.

இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x