

அமெரிக்காவுடன் தற்போது வடகொரியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை இல்லை என்று கிம்மின் சகோதாரியான கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ அணுசக்தி சோதனை பேச்சு வார்த்தை தொடர்பாக வடகொரியாவுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் இதற்கு பதிலளித்திருக்கிறார் வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரியான கிம் யோ ஜிங்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை கிம் யோ கிங் கூறும்போது, “ அமெரிக்காவுடன் மீண்டும் அமர்த்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தேவை இல்லை. ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் அது ஒரு தரப்பின் பெருமைக்காக மட்டுமே இருக்கும். தற்போதைய சூழலில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை இல்லை” என்று தெரிவித்தார்.
வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜிங், கிம்முக்கு அடுத்து சக்தி வாய்ந்த நபராக அந்நாட்டில் அறியப்படுகிறார்.
அதிபர் கிம்மின் சொந்தத் தங்கையான கிம் யோ ஜாங் அந்நாட்டின் அதிகாரம் படைத்த அமைப்பான வடகொரிய தொழிலாளர் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் முக்கியமான அரசியல் தலைவராகவும் உள்ளார்.
கிம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே தன்னுடைய தங்கைக்கு அரசியலில் முக்கிய பொறுப்புகள் வழங்கியுள்ளார்.
தோல்வியில் முடிந்த ட்ரம்ப் - கிம் சந்திப்பு
முன்னதாக, வடகொரியா ராக்கெட் ஏவுதளச் சோதனையில் இறங்கியுள்ளது என்று தென்கொரியா விமர்சித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரியாவுக்கும் அந்நாட்டு அதிபர் கிம்முக்கும் மறைமுகமாக மிரட்டல் விடுத்தார். இந்த நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எனினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.
இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டு ட்ரம்ப் - கிம் இடையே சந்திப்பு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோவில் நடைபெற்றது. இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.