இந்திய செய்தி சேனல்கள் நேபாளத்தில் ஒளிபரப்புவது நிறுத்தம்: தூர்தர்ஷனுக்கு மட்டுமே அனுமதி

நேபாள பிரதமர் சர்மா ஒளி : கோப்புப்படம்
நேபாள பிரதமர் சர்மா ஒளி : கோப்புப்படம்
Updated on
2 min read

இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் செய்தி சேனல்கள் நேபாளத்தில் ஒளிபரப்பு செய்ய அந்தநாட்டு அரசு தடை விதித்துள்ளது. தூர்தர்ஷன் மட்டும் ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்கியுள்ளது

நேபாள நாட்டின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தனியார் செய்தி சேனல்கள் செய்தி வெளியிடுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நேபாள அரசு சார்பில் எந்தவிதமான அதிகாரபூர்வமான உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது

உத்தரகாண்ட் மாநிலம், தார்சுலாவிலிருந்து லிபுலேக் பகுதியை இணைக்கும் 80 கி.மீ. சாலையை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தபோது நேபாள அரசு அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்தியா புதிதாக அமைத்துள்ள 80 கி.மீ. சாலை எங்கள் எல்லைக்குள் வருகிறது என்று நேபாள அரசு குற்றம் சாட்டியது. ஆனால், அதை மறுத்த மத்திய அரசு முழுவதும் அந்த சாலை இந்தியாவின் எல்லைக்குள் மட்டுமே இருக்கிறது என உறுதி செய்தது.

இதையடுத்து லிபுலேக், காலாபானி உள்ளிட்ட இந்தியப் பகுதிகளை தங்கள் எல்லைகளாக மாற்றி தன்னிச்சையாக வரைபடத்தை நேபாள அரசு வெளியிட்டது. இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் நேபாள பிரதமர் சர்மா ஒலியையும், அவரின் அரசையும் இந்திய செய்தி சேனல்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மேலும், தற்போது நேபாளத்தில் பிரதமர் சர்மா ஒலி யின் ஆட்சிக்கும் சிக்கல் எழுந்து, அவர் ராஜினாமா செய்ய கட்சிக்குள்ளே எதிர்ப்புக் குரல் வலுத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய ஊடகங்கள் தொடர்ந்து செய்து வெளியிட்டு வருகின்றன என்பதால் இந்த முடிவை நேபாளம் எடுத்திருக்கக்கூடும் எனச் சொல்லப்படுகிறது.

இந்திய செய்தி சேனல்களுக்கு நேபாளத்தில் ஒளிபரப்பத் தடைவிதிக்கப்பட்டது குறித்து மத்திய அரசு சார்பில் இதுவரை எந்தவிதமான கருத்தும் வெளியிடப்படவில்லை.

நேபாளத்தின் வெளிநாடு சேனல்கள் பகிர்மான அமைப்பின் தலைவர் தினேஷ் சுபேதி கூறுகையில் “ இந்தியாவில் தூர்தர்ஷன் சேனலைத் தவிர்த்து அனைத்து இந்திய செய்தி சேனல்கள் ஒளிபரப்பையும் நிறுத்திவிட்டோம். நேபாள நாட்டின் தேசிய உணர்வை புண்படுத்தும் வகையில் செய்தியை வெளியிடுகின்றன” எனத் தெரிவித்தார்

நேபாள நாட்டின் நிதி, தகவல் மற்றும் தகவல்தொடர்பு அமைச்சர் யுவராஜ் காதிவாடா கூறுகையில் “ இந்தியாவில் உள்ள சில செய்தி சேனல்கள் ஆதாரமற்ற வகையில் நேபாள அரசியல் குறித்து செய்தி வெளியிடுகின்றன. இது கண்டிக்கத்தக்கது. இந்த கண்டிக்கத்தக்க செயலை அரசியல் மற்றும் சட்டரீதியில் நேபாள அரசு கையாளும்” எனத் தெரிவித்தார்

நேபாள ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நாராயண் காஜி ஸ்ரேஸ்தா கூறுகையில் “ நேபாள பிரதமர் சர்மா ஒளி, அவரின் அரசுக்கு எதிராக இந்திய செய்தி சேனல்கள் அடிப்படை ஆதாரமற்ற வகையில் பிரச்சாரம் செய்வதை நிறுத்த வேண்டும்,அனைத்துக்கும் எல்லை இருக்கிறது. முட்டாள்தனமான செய்திகளை நிறுத்த வேண்டும்” எனக் கண்டித்திருந்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in