

சவுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 41 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து சவுதியில் கரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 2,100 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “சவுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 41 பேர் கரோனாவுக்குப் பலியாகினர். மேலும் 3,183 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா உறுதிப்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ரியாத்தைச் சேர்ந்தவர்கள். சவுதியில் இதுவரை 2,23,327 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,61,096 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 2,100 பேர் பலியாகி உள்ளனர்” என்று செய்தி வெளியானது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதி அரேபியாவும் கரோனா தொற்றால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன.
கரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவுக்கு அடுத்து நான்காவது இடத்தில் ரஷ்யா உள்ளது. கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடாமல் திணறி வருகின்றன.
இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்குத் தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.