

ரஷ்யாவில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய நோய்த்தடுப்பு மையம் தரப்பில், “ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,562 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,00,792 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 1,817 பேருக்குக் கரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை. மாஸ்கோ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்யாவில் நேற்று மட்டும் கரோனாவுக்கு 173 பேர் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா பலி எண்ணிக்கை 10,667 ஆக அதிகரித்துள்ளது.
ரஷ்யாவில் கடந்த ஒரு மாதமாகவே ஒவ்வொரு நாளும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தலைநகர் மாஸ்கோவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவுக்கு அடுத்து நான்காவது இடத்தில் ரஷ்யா உள்ளது.
கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடாமல் திணறி வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்குத் தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.