Last Updated : 08 Jul, 2020 07:55 AM

 

Published : 08 Jul 2020 07:55 AM
Last Updated : 08 Jul 2020 07:55 AM

சீனாவின் முக்கிய அதிகாரிகளுக்கு விசா வழங்க கட்டுப்பாடு: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ அதிரடி


திபெத்துக்குள் நுழைவதற்கு அமெரிக்க மக்களுக்கும், அதிகாரிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் சீனா கட்டுப்பாடுகளையும், தடையும் விதிப்பதைப் போல், அதே அடிப்படையில் திபெத் அணுகல் சட்டப்படி சீனாவின் முக்கிய அதிகாரிகளுக்கும் அமெரிக்காவில் நுழைய விசா கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்

இமாலயமலைப்பகுதியில் இருக்கும் திபெத் பகுதியை ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டுக்குள் சீனா வைத்துள்ளது. இதனால் திபெத்தை ஆண்டு வந்த தலாய்லாமா அங்கிருந்து தப்பி இந்தியாவில் கடந்த 1959-ம் ஆண்டு அடைக்கலமாகினார்.

திபெத் பகுதிக்குள் சீனாவின் ஆக்கிரமிப்பும், அதிகாரமும் தொடர்வதால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், அமெரிக்க மக்கள், பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் யாரையும் திபெத்துக்குள் நுழைய சீனா அனுமதிப்பதில்லை. அரசு முறைப் பயணமாக அமெரிக்க அதிகாரிகள் திபெத் செல்ல முயன்றாலும் அதற்கும் சீனா அனுமதி மறுத்து வருகிறது

இதனால் அமெரிக்காவில் வசிக்கும் திபெத்திய மக்கள் திபெத் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது, திபெத்தில் உள்ள மக்களும் அமெரிக்கா செல்ல விசா கிடைப்பதிலும் சிக்கல் நீடித்து வருகிறது. இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி திபெத் அணுகல் சட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்து அதற்கு அதிபர் ட்ரம்ப்பும் கையொப்பமிட்டார்.

இந்த சட்டப்படி திபெத்துக்குள் அமெரிக்க மக்களை அனுமதிக்க மறுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், சீனாவின் முக்கிய அதிகாரிகளுக்கும் விசா வழங்குவதில் அமெரிக்காவும் கட்டுப்பாடுகளை கொண்டுவரும் சட்டமாகும். இந்த சட்டம் நிறைவேற்றியபோது சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், அமெரிக்கா அதை தீவிரமாகச் செயல்படுத்தவில்லை. சீனாவைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள், திபெத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள், சீன கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தடையின்றி அமெரிக்காவுக்குள் வருவதும் செல்வதுமாகவே இருக்கின்றனர்.
இனி வரும் காலங்களில் திபெத் அணுகல் சட்டத்தை கடுமையாக்கி, சீனாவின் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கும், சீன கம்யூனிஸ்ட் அதிகாரிகளுக்கும் விசா வழங்குவதில் கட்டுப்பாடு கொண்டுவர அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது

“ திபெத் பகுதிக்குள் செல்ல வெளிநாட்டினர், அமெரிக்க மக்கள், சுற்றுலாப்பயணிகள் பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு அனுமதி மறுக்கும் சீன அதிகாரிகளுக்கு அமெரிக்காவும் விசா வழங்குவதில் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. திபெத் பகுதிக்குள் நுழைய மற்ற வெளிநாட்டினருக்கு இருப்பதுபோல், சீன அதிகாரிகளும் அமெரிக்காவுக்குள் நுழைய கட்டுப்பாடு இருக்கும்.

சீனாவின் சுயாட்சிப்பகுதியான இருக்கும் திபெத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், சுற்றுலாப்பயணிகள் செல்ல சீனா அனுமதி மறுக்கிறது. ஆனால், சீன அதிகாரிகள், சீன மக்கள் அமெரிக்காவுக்குள் சுதந்திரமாக வந்து, பல்வேறு வசதிகளை அனுபவிக்கிறார்கள்.

ஆதலால், திபெத்த பகுதி்க்குள் வெளிநாட்டினர், பத்திரிகையாளர்கள், அமெரிக்க மக்கள் நுழைய தடையாக இருக்கும் சீன அரசு அதிகாரிகள், சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகளுக்கு திபெத் அணுகல் சட்டப்படி விசா வழங்குவதில் கட்டுப்பாடு கொண்டுவருகிறோம்.

திபெத் பகுதிக்குள் சீன அதிகாரிகள் ஏராளமான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறார்கள், அங்கு ஆசியாவில் மிகப்பெரிய ஆறுகளுக்கு கேடு விளைவித்து, அந்த ஆறுகளை பாதுகாக்க சீனா தவறி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருகிறது.

சீனாவுக்குள் வசிக்கும் திபெத்திய மக்கள், வெளிநாடுகளில் வசிக்கும் திபெத்திய மக்களின் நலனுக்காகவும், திபெத்தில் பொருளாதார மேம்பாடு வருவதற்கும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மனிதஉரிமை மீறல்களை தடுக்கவும் அமெரிக்கா தொடர்ந்து பங்களிப்பு செய்யும்

திபெத்திய மக்களுக்கு நியாயமான முறையில் சுயாட்சி கிடைக்க ஆதரவு தருவோம், அவர்களின் அடிப்படை உரிமைகள், மறுக்க முடியாத மனித உரிமைகளுக்குமதிப்பளிப்போம். அந்த மக்களின் தனிப்பட்ட மதவழிபாடுகள், கலாச்சாரம், மொழி ஆகியவற்றையும் பாதுகாப்போம். அமெரிக்க மக்கள் சீனாவின் ஆளுமைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும், திபெத்திய பகுதிகளிலும் செல்ல தொடர்ந்து உழைப்போம்

இவ்வாறு பாம்பியோ தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x