

இட்லிப் மாகாணத்தில் சிரியா மற்றும் ரஷ்யா போர்க் குற்றங்கள் புரிந்துள்ளன என்று ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியுடனான போர் நிறுத்தத்திற்கு முன்னர், சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் அரசுப் படைகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் கடுமையான தாக்குதலை நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாயினர். ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை பொது விசாரணையில் ஈடுபட்டது. இந்த நிலையில் அது தொடர்பான அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், “இட்லிப் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிகளில் சிரிய அரசுப் படைகள், ரஷ்யப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி போர்க் குற்றங்கள் புரிந்துள்ளன. சிரிய அரசுக்கு ஆதரவான படைகள் போர் விதிகளை மீறியுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளர்ச்சியாளர்கள் தரப்பும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களில் சிரியாவில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 500 பேர் வரை பலியாகியுள்ளனர்.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது.