

ஆஸ்திரேலியாவில் கடந்த சில வாரங்களாகவே கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெல்போர்ன் நகர அரசுத் தரப்பில், “மெல்போர்னில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கரோன நெருக்கடி முடிந்துவிட்டது என்று எங்களால் நடிக்க முடியாது. புதன்கிழமை நள்ளிரவு முதல் தொடர்ந்து ஆறு வாரங்கள் மெல்போர்னில் ஊரடங்கு நீடிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வகுப்புகளைத் தொடர அரசு அறிவுறுத்தியுள்ளது. உணவகங்கள் அனைத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் மீண்டும் கரோனா பரவல் தொடங்கியுள்ள நிலையில், அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முன்னரே ராணுவம் அழைக்கப்பட்டிருந்தது.
ஆஸ்திரேலியாவில் கரோனா பரவல் 75% கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அங்கு கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் 8,586 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 106 பேர் பலியாகி உள்ளனர். 7,420 பேர் குணமாகி உள்ளனர்.