

சிங்கப்பூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,983 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 183 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 23 பேர் ஏற்கெனவே தொற்று இருந்தவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள். 7 பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.
மற்றவர்களுக்குத் தொற்று எவ்வாறு வந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
சிங்கப்பூரில் இதுவரை 44,983 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40,441 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளிலிருந்து மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள தொழிலாளர் விடுதிகளில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
மிக நெருக்கமாகக் கட்டப்பட்டு இருக்கும் அத்தகைய விடுதிகளில்தான் அதிக அளவில் கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. எனவே, விடுதிகளை மையமாக வைத்து சிங்கப்பூர் அரசு மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரமாகச் செய்தது. இதன் காரணமாக தற்போது தொற்று குறைந்துள்ளது.
கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.
இந்த நிலையில் சிங்கப்பூர் அரசு கடந்த மாதம் முதல் ஊரடங்கில் சில தளர்வுகளைக் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.