

கரோனா வைரஸ் ஸ்பெயின் நிர்வாக அமைப்பில் உள்ள குறைபாடுகளை வெளிக்கொண்டு வந்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் நிபுணர் தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து பரவிய கரோனா வைரஸ் காரணமாக 5 மாதங்களுக்கும் மேலாக உலகப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. கோடிக்கணக்கான வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் பொருளாதார இழப்பீட்டைச் சரிசெய்யும் முயற்சியில் உலக நாடுகள் இறங்கியுள்ளன. இதன் காரணமாக கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஒரே வழியான ஊரடங்கிலும் அரசுகள் அவ்வப்போது தளர்வுகளைக் கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்தக் கரோனா தொற்று ஸ்பெயின் நிர்வாக அமைப்பில் உள்ள குறைபாடுகளை எடுத்துக் காட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் முன்னாள் நிபுணரான பிலிப் அல்ஸ்சான் கூறும்போது, “கரோனா வைரஸ் மக்கள் மீதான பாதுகாப்பில் ஸ்பெயின் நிர்வாக அமைப்பில் உள்ள குறைபாடுகளைக் காட்டியுள்ளது. இந்த ஊரடங்குக் காலங்களில் லட்சக்கணக்கான ஸ்பெயின் மக்கள் அரசாங்க உதவிகளைப் பெற முடியாமல் தவித்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினில் கரோனா தொற்றால் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமாகி உள்ளனர்.