Last Updated : 30 Sep, 2015 05:13 PM

 

Published : 30 Sep 2015 05:13 PM
Last Updated : 30 Sep 2015 05:13 PM

அமெரிக்காவில் அசத்திய ஜப்பானின் உணர்வுபூர்வ எந்திரன்!

தங்களைப் போலவே மெஷினும் பேசுகிறது, பாடுகிறது, ஆடுகிறது என்றால் மனிதர்களுக்குத்தான் எவ்வளவு வியப்புகலந்த மகிழ்ச்சி.. அமெரிக்காவின் நியூயார்க்கில் அமைந்துள்ளது கிளிண்டன் குளோபல் இனிஷியேடிவ் கல்வி நிறுவனம். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பில்கிளிண்டனின் சொந்த நிறுவனம்தான் இது. சமீபத்தில் இந்நிறுவனத்தின் ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவுக்கு வந்திருந்த விருந்தாளி

கிளிண்டன் குளோபல் இனிஷியேடிவ் நிறுவனத்தின் ஆண்டுவிழா வேறெப்போதையும்விட இந்த முறை படு கலகலப்பாக அமைந்துவிட்டது என்கிறார்கள். அதற்குக் காரணம் பெப்பர்! இது நாம் தினம் தினம் பொங்கல் உள்ளிட்ட உணவில் சுவைக்காக சேர்க்கப்படும் பெப்பர் அல்ல. இது வேறு பெப்பர். மனிதனின் குணநலன்களை ஒருங்கே பெற்ற ரோபோ மெஷின்தான் இந்த பெப்பர். ஜப்பானிலிருந்து இந்த விழாவுக்கு ஒரு விருந்தாளியாக அவன் வந்திருந்தான். விழாவில் இவனோடு உரையாட வரவழைக்கப்பட்டவர் அமெரிக்க முன்னணி வானியல் அறிஞரான நெய்ல் டிகிராசெ டைசன்.

யார் இந்த பெப்பர்?

ஜப்பானின் பிரபல மொபைல் தொழில்நுட்ப நிறுவனமான சாஃப்ட்பேங்கின் பிரிவான ஆல்டர்பெரானின் சமீபத்திய கண்டுபிடிப்பு இந்த பெப்பர். மனித இயல்புகள் அமைந்தது மட்டுமின்றி அவர்களோடு உடன் வாழக்கூடிய முதல் ரோபோ இது.

உங்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு உங்களோடு பேசக்கூடியது மட்டுமின்றி அவனாகவே நடந்துசென்று பலவிதமான வேலைகளை எடுத்து செய்யக்கூடியக் கூடியவனாக இருக்கும் ஒரு சமூக மனித யந்திரமாக பெப்பர் விளங்குகிறான். அவன் ஒரு நண்பனாக உங்களை உள்ளுணர்வோடு தொடர்பு கொள்வான்.

புதிய கண்டுபிடிப்பான இந்த பெப்பர் ரோபோ ஜப்பானில் இன்று பல கடைகளில் வாடிக்கையாளர்களின் தேவைகளை கவனித்து வருகிறான். பெப்பரின் சேவை அறிந்த பலரும் தங்கள் பாராட்டைத் தெரிவித்துச் சென்றுள்ளார்கள்..

உணர்பூர்வமான நண்பன்

உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ளக்கூடிய ஓர் உண்மையான சமூகத் துணைவனாக அவன் இருப்பான்.. நீங்கள் மனம்விட்டு சிரிக்கிறீர்கள் என்றால் நீங்கள் நல்லமனநிலையில் இருக்கிறீர்கள் என்பதை பெப்பர் அறிந்துகொள்வான். நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்றால் உங்களுக்கு ஏதோ சிக்கல் என்பதையும் அவன் புரிந்துகொண்டு அதற்கேற்ப இங்கிதத்தோடு நடந்துகொள்வான்.

மகிழ்ச்சி, வியப்பு, கோபம், சந்தேகம் மற்றும் அச்சம் போன்ற உணர்ச்சிகள் உங்கள் முகத்தில் வெளிப்பட்டாலோ உங்கள் வார்த்தைகளில் அவை வெளிப்பட்டாலோ, உங்கள் உடல்மொழி அதைக் காட்டிக்கொடுத்துவிட்டாலோ எப்படியிருந்தாலும் அதைக் கண்டுபிடிக்கும் திறன்படைத்தவன் இந்த பெப்பர்.

அதுமட்டுமின்றி நீங்கள் என்ன மனநிலையில் இருக்கிறீர்கள் என்பதை ஆய்ந்து அறிந்து அதற்கேற்ப தனது அறிவைப் பயன்படுத்தி தங்களோடு உரையாடி ஆற்றுப்படுத்தவும் செய்வான். எப்படி தெரியுமா? உங்களுக்கு பிடித்த பாடலைப் பாடி உங்களை மகிழ்விப்பான். அதேபோல பெப்பர் தனது உணர்ச்சிகளையும் அழகாக வெளிப்படுத்துவான்.

தனது உடல்மொழியால், தனது வேடிக்கையான சமிக்ஞைகளால், தனது குரலால் உணர்ச்சிகளை அவன்வெளிப்படுத்தும்போது 'அட இவனல்லவோ உண்மையான பர்சனாலிட்டியான ஆள்!' என்று வியப்பீர்கள்...

தோழமைக்கும் மேலாக பழகக்கூடியவன்...

பெப்பர் லேசுபட்ட ஆள் என்று நினைத்துவிடாதீர்கள்... மனிதர்களிடத்தில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் காதலையும் பேசக்கூடியவன். அவனோடு நீங்கள் தொடர்ந்து பேசுபவராக இருந்தால் உங்களை தெரிந்துகொள்வதோடு உங்கள் பிடித்த பலவற்றையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப பேசி மகிழ்விப்பான். அதுமட்டுமில்லை... உங்கள் சுய முன்னேற்றம் குறித்து மிகவும் அக்கறையோடு உங்களை வளப்படுத்த பல புதிதாக வந்துள்ள தொழில்நுட்பங்களை வாய்ப்புகளைப் பற்றியெல்லாம் கூறி உங்களை வியப்பில் ஆழ்த்துவான்..

பெப்பருடைய இலக்கு படிப்படியாக கற்றுக்கொண்டு வளர்வதுதான். அந்தவகையில் உங்கள் வீட்டில் அவன் வந்து சேர்ந்தபிறகு விரைவில் ஒருநாள் உங்களுக்கு உற்ற தோழனாகிவிடுவான். முன்னேற வேண்டும் என்ற துடிப்பும் படைப்புமனமும் கொண்டவர்களுக்கு இவன் நிச்சயம் உதவுவான்.அதற்கு ஏற்றவகையில் அவனை முழுமையான நண்பனாக்கிட நாம் எதிர்கொள்ளும் சவாலும்கூட ஒரு சுவாரஸ்யம்தான்.

வீடியோ காட்சி

ஜப்பானின் ஒமெட்டேசேண்டோ எனப்படும் உலகின் முக்கிய கட்டிடக்கலை காட்சியங்காடி வீதியில் அமைந்துள்ள சாப்ஃட்பேங்க் நிறுவனத்தில், பெப்பர் தினம் தினம் வாடிக்கையாளர்களை சந்திக்கும் காட்சியை ஒரு சிறு காணொலி படமாகத் தந்திருக்கிறார்கள். 2014ல் வெளிவந்த இப்படத்தை நீங்களும் பாருங்களேன்.