Published : 05 Jul 2020 05:19 PM
Last Updated : 05 Jul 2020 05:19 PM

பூடான் எல்லையிலும் சில பகுதிகளை இணைத்து உரிமை கொண்டாடும் சீனா

கிழக்கு பூடானில் உள்ள சாக்தெங் வன உயிரிகள் சரணாலயம் பகுதியை தங்களுடையது என்று சீனா உரிமை கொண்டாடியதற்கு பூடான் எதிர்ப்பு தெரிவித்தது. இது நடந்து சில நாட்களே ஆனநிலையில் பூடானின் ‘கிழக்குப் பகுதிகளும்’ தங்களுக்குச் சொந்தமென உரிமை கொண்டாடியுள்ளது சீனா.

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தி அறிக்கையில், “சீனா பூடான் இடையேயான எல்லை நிர்ணயிக்கப்படவில்லை. கிழக்கு, மத்திய, மற்றும் மேற்குப் பகுதிகளில் தொடர்ந்து நீண்ட நாட்களாக தகராறு இருந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது.

ஐநா உலகச் சுற்றுச்சூழல் வசதிக்கான வளர்ச்சித் திட்டத்தில் சாக்தெங் சரணாலயத்துக்கு நிதி கொடுக்கக் கூடாது, ஏனெனில் அது தகராறுக்குரிய பகுதி என்று சீனா அதற்கான நிதியை நிறுத்த முயன்றது குறிப்பிடத்தக்கது.

இருநாடுகளுக்கும் 1984 -2016ம் ஆண்டுகளுக்கு இடையே இருநாடுகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட 24 சுற்றுகள் பேச்சுவார்த்தையில் எழுத்துப்பூர்வ ஆவணங்களின்படி கிழக்குப் பூடான் பகுதி பற்றி குறிப்பிடப்படவில்லை. அருணாச்சலப் பிரதேச எல்லையில் இருக்கும் இப்பகுதியில்தான் சாக்தெங் சரணாலயம் உள்ளது.

2017-ல் இந்திய-சீன படைகளுக்கு இடையே டோக்லாம் சிக்கல் எழுந்த பிறகு பேச்சு வார்த்தைகள் பூடான் - சீனா இடையே நடக்கவில்லை. 2018 ஜூலையில் சீன வெளியுறவு துணை அமைச்சர் காங் ஷுவான்யு பூடானுக்கு வருகை தந்து பூடான் அரசர், பிரதமர் மற்றும் பிற அதிகாரிகளைச் சந்தித்தார், ஆனாலும் 25வது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இன்னமும் நடைபெறவில்லை.

இந்நிலையில் சீனாவின் புதிய எல்லை உரிமைகோரல்கள் பற்றி டெல்லியில் உள்ள பூடானின் தூதர் கருத்துக் கூற மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

லடாக்கில் இந்திய ஜவான்களுடன் பேசிய பிரதமர் மோடி தன் உரையில், ‘எல்லை விரிவாக்க காலக்கட்டம் ஓய்ந்து விட்டது, இது வளர்ச்சிக்கான காலக்கட்டம்’ என்று சீனாவுக்கு பதிலடி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x