

இனவெறிக்கு எதிரான போராட்டங்களை அமெரிக்க வரலாற்றை அழிக்கும் முயற்சி என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொதிப்படைந்து பேசியுள்ளார்.
அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி தேசிய நினைவிடம் அமைந்துள்ள மவுண்ட் ரஷ்மோரில் நேற்று அதிபர் ட்ரம்ப் பேசினார்.
அதில், “சமீப காலங்களாக அமெரிக்காவில் போராட்டங்கள் கவலையளிக்கக் கூடியதாக மாறியுள்ளன. இதில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. அமெரிக்காவை நிறுவிய தலைவர்கள் சிலைகள் வீழ்த்தப்படுகின்றன. முக்கிய நினைவிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன.
அமெரிக்காவின் அரசியல் அடித்தளத்தையே ஆட்டிப்படைப்பதாக இந்த போராட்டங்கள் இருக்கின்றன. இனவெறிக்கு எதிரான போராட்டம் என்று சிலர் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு சிலர் அமெரிக்காவின் வரலாற்றை அழிக்கப்பார்க்கின்றனர்.
இடதுசாரிக் கலாச்சாரப் புரட்சி என்ற பெயரில் அமெரிக்க கலாச்சாரத்தை அழிக்கப்பார்க்கின்றனர். பள்ளிகளில் நம் குழந்தைகளுக்கு நம் கலாச்சாரத்துக்கு எதிரான விஷயங்களை போதிக்கின்றனர். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.
நம் நாட்டை நிறுவிய வளர்ச்சியடைந்த நாடாக மாற்றிய தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர்களது சிலைகளுடன் கூடிய திறந்தவெளி பூங்கா விரைவில் அமைக்கப்படும்” என்று பேசினார் ட்ரம்ப்.