

அண்டை நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் தென் சீன கடல் பகுதிக்கு அமெரிக்கா 2 போர்க் கப்பல்களை அனுப்பி பயிற்சியில் ஈடுபடுகிறது.
காஷ்மீரின் லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். தவிர, தென் சீன கடல் எல்லையில் புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளும் சீனாவுடன் கடல் பகுதியை பகிர்ந்து கொள்கின்றன. ஆனால், 90 சதவீதம் தனக்கே சொந்தம் என்று கூறி தென் சீன கடல் பகுதியில் தானே ஆதிக்கம் செலுத்த சீனா விரும்புகிறது. இந்த சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் சீன கடற்படையினர் சமீபத்தில் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டனர். இதற்கு அண்டை நாடுகளும் அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், அண்டை நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தென் சீன கடல் பகுதிக்கு யுஎஸ்எஸ் நிமிட்ஸ், யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன் ஆகிய 2 விமானம் தாங்கி போர்க் கப்பல்களை அமெரிக்கா அனுப்பி உள்ளது. பிலிப்பைன்ஸ் கடல் பகுதியையும் தென் சீன கடல் பகுதியையும் இணைக்கும் லுசோன் ஜலசந்தி கடல் பகுதியில் 2 அமெரிக்க கப்பல்களும் செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதை அமெரிக்க கடற்படையும் உறுதிப்படுத்தி உள்ளது. இரண்டு போர்க் கப்பல்களும் தென் சீன கடல் பகுதியில் ராணுவப் பயிற்சியில் ஈடுபடும் என்றும் சுதந்திரமான தாராளமான இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பையும் நிலையான தன்மையையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ரொனால்ட் ரீகன் கப்பலின் கடற்படை அதிகாரி அட்மிரல் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதனால், தென் சீன கடல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.