

கரோனா வைரஸ் சாம்பிள்களிலிருந்து பெறப்பட்ட மரபணுத் தொடர் வரிசைத் தரவுக்ளில் மூன்று சாம்பிளுக்கு ஒரு சாம்பிள் வைரஸ் தன் உருவிலும் தன்மையிலும் மாற்றமடைந்திருப்பது திட்டவட்டமாக தெரியவந்துள்ளது.
அதாவது இதுவரை சேகரிக்கப்பட்ட வைரஸ் மரபணு மாதிரிகளில் 30% உருமாற்றம் அடைந்ததாக உள்ளது. ஆனால் இது மேலும் கொடிய நோயை உருவாக்கும் என்பதற்கான அறிகுறிகள் இல்லாதது என்று உலகச் சுகாதார அமைப்பின் முன்னணி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகச் சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “இது பரந்துபட்ட அளவில் தொற்றியுள்ள வைரஸ் சாம்பிள்களில் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று. 30% சாம்பிள்களில் வைரஸின் தன்மை மாற்றமடைந்துள்ளது.
உலகச் சுகாதார அமைப்பு இதுவரை 60,000 சாம்பிள்களை சேகரித்துள்ளது.
ஸ்கிரிப்ஸ் ஆய்வுக்கழக விஞ்ஞானிகள் கூறும்போது ஏப்ரலில் உரு, இயல் மாற்றமடைந்த கரோனா வைரஸ் விகிதம் 65% என்று கூறுகிறது.
புதிய கரோனா வைரஸின் மரபணு உருமாற்றம் D614G என்று குறிப்பிடப்படுகிறது. இதற்குச் செல்களைத் தொற்றும் திறன் அதிகம். இதன் மூலமே வடக்கு இத்தாலி மற்றும் நியுயார்க்கில் ஏன் கரோனா இப்படி பல்கிப்பெருகியது என்பதை விளக்க முடியும்.
ஆனால் இந்தப் புதிய, உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸினால் தீவிரமான பாதிப்புகள் ஏற்படும் என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை என்றே உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் இரட்டிப்பாகும் போது அதன் உரு, இயல் மாற்றமடைவதால்தான் வாக்சின் என்பது மிகவும் கடினமான ஒன்று என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.
-ராய்ட்டர்ஸ்