

மியான்மரில் உள்ள ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 162-ஆக அதிகரித்துள்ளது. 54 பேர் காயமடைந்துள்ளனர்.
மியான்மரின் வடக்குப் பகுதியில் உள்ள காச்சின் மாகாணத்தில் உள்ள ஜேட் சுரங்க நிலையத்தில் நேற்று கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு வேலையில் இருந்த தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கினர்.
ஆரம்ப நிலையில் 100 பேர் வரையில் உயிரிழந்த நிலையில் தற்போதைய தகவலின்படி 162 பேர் இறந்துள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
”மழை நீரோடு கலந்து பெருமளவு சகதி ஏரிக்குள் இறங்கியது. அது சுனாமிபோல் இருந்தது. எதிர்பாராத விதத்தில் இந்த விபத்து நடந்துள்ளது” என்று மியான்மரின் சமூக விவகார அமைச்சர் காசின் கூறினார்.
மழைபெய்து வருவதால் இந்தப் பகுதிகளில் மக்கள் வேலையில் ஈடுபட வேண்டாம் என்று எச்சிரிக்கை விடுக்கப்பட்டடிருந்தது. அதை மீறியும் சிலர் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இருந்தபோதிலும் அந்த அறிவிப்பால் பல உயிர்கள் பாதுக்காக்கப்பட்டிருக்கிறது என்று போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணிக்க கல் உற்பத்தி மையமாக மியான்மர் விளங்கி வருகிறது. ஆண்டுக்கு 30 பில்லியன் டாலருக்கு மாணிக்க கல் வர்த்தகம் நடைபெறுகிறது.
மியான்மரில் அனுமதி பெற்றும் முறையான அனுமதி இல்லாமல் பல சுரங்கங்கள் செயல்பாட்டில் உள்ளன. நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு அபாயங்கள் நிறைந்த அந்த சுரங்கங்களில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 100 பேர் இறந்துள்ளனர்.