

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 53,000 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட், “அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,000 பேருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புளோரிடாவில் மட்டும் நேற்று 10,000க்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,32,639 ஆக அதிகரித்துள்ளது. 1,28,643 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
கரோனா பரவல் நீடித்து வந்தபோதிலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவில் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தேவாலயங்கள் ஆகியவை டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் புழக்கம் அதிகரித்தது.
குறிப்பாக புளோரிடா, டெக்சாஸ், அரிசோனா, கலிபோர்னியா ஆகிய மாகாணங்களில் அதிக எண்ணிக்கையில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
அமெரிக்காவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மக்கள் சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்றவற்றைப் பின்பற்றுமாறு அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்க மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பதைப் பார்க்கும்போது, விரைவில் நாள்தோறும் ஒரு லட்சம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என அச்சப்படுவதாக அந்நாட்டின் கரோனா தடுப்பு தலைமை மருத்துவர் அந்தோனி ஃபாஸி சில நாட்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.