

இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு.ஜயசூரிய இன்று (வியாழக்கிழமை) காலை அறிவித்தார். மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதான எதிர்க்கட்சியாகவும் அவர் அறிவித்துள்ளார்.
38 ஆண்டுகளுக்குப் பின்னர்...
சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழரசு கட்சி சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரா.சம்பந்தன், இலங்கையில் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு, 1977 ஆம் ஆண்டு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி சார்பில் போட்டியிட்ட அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் எதிர்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி (யுஎன்பி) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து 2-ம் இடம் பிடித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும் (எஸ்எல்எப்பி) யுஎன்பியும் இணைந்து தேசிய அரசு அமைக்க முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து, மூன்றாம் இடத்தில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இந்தக் கூட்டமைப்பு, தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சி சின்னத்தில் போட்டியிட்டதால், இதன் நாடாளுமன்ற குழு தலைவரை எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மொத்தம் உள்ள 225 இடங்களில் யுஎன்பி 106 இடங்களிலும் எஸ்எல்எப்பி கூட்டணி 95 இடங்களிலும் டிஎன்ஏ 16 இடங்களிலும் வெற்றி பெற்றன. மீதமுள்ள இடங்களில் இதர கட்சிகள் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.