

இலங்கை உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனவர்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணை நிறைவடைந்துவிட்டது என்று அந்த விசாரணை கமிஷனின் தலைவர் மேக்ஸ்வெல் பரனகாமா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 1990 ஜூன் முதல் 2009 மே வரை காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்த 2013 ஆகஸ்டில் சிறப்பு கமிஷன் அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி மேக்ஸ்வெல் பரனகாமா தலைமையில் அமைக்கப்பட்ட இந்த கமிஷன், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி மக்களிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்தியது.
கடந்த ஏப்ரலில் தனது முதல்கட்ட அறிக்கையை அதிபரிடம் கமிஷன் தாக்கல் செய்தது. இறுதி அறிக்கை ஆகஸ்டில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து தி இந்துவுக்கு நீதிபதி மேக்ஸ்வெல் பரனகாமா அளித்த பேட்டியில் கூறியதாவது: எங்களது விசாரணையை ஏறக்குறைய நிறைவு செய்துவிட்டோம். எனினும் அதிபரிடம் எப்போது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்பதை உறுதியாகக் கூற முடியாது.
அதிபர் மைத்ரிபால சிறிசேனா வுக்கு தற்போது வேலைப்பளு அதிகமாக உள்ளது. இதனால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதிபரிடம் அறிக்கையை அளித்த பிறகு அதனை பகிரங்கமாக வெளியிடுவதா, வேண்டாமா என்பது குறித்து அவரே முடிவு செய்வார்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
கமிஷனின் அதிகாரபூர்வ இணையதள புள்ளிவிவரத்தின்படி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து மொத்தம் 17,329 புகார்கள் பெறப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினர் சுமார் 5 ஆயிரம் புகார் மனுக்களை அளித்துள்ளனர்.