

அமெரிக்காவில் ஒரே நாளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியில், “அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,788 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இது சமீபத்தில் அமெரிக்காவில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச தொற்றாகும். கலிபோர்னியாவில் 9,740 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 27,79,953 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,30,798 பேர் பலியாகி உள்ளனர். 11,64,680 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் நீடித்து வந்த போதிலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவில் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தேவாலயங்கள் ஆகியவை டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் புழக்கம் அதிகரித்தது.
குறிப்பாக ப்ளோரிடா, டெக்சாஸ், அரிசோனா, கலிபோர்னியா ஆகிய மாகாணங்களில் அதிக எண்ணிக்கையில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
அமெரிக்க மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பதைப் பார்க்கும்போது, விரைவில் நாள்தோறும் ஒரு லட்சம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என அச்சப்படுவதாக அந்நாட்டின் கரோனா தடுப்பு தலைமை மருத்துவர் அந்தோனி ஃபாஸி எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.