

மியான்மரின் வடக்குப் பகுதியில் பிரபல ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50 பேர் பலியானதாகவும், பலர் மாயமானதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “மியான்மரின் வடக்குப் பகுதியில் உள்ள காச்சின் மாகாணத்தில் ஹபகண்ட் பகுதியில் உள்ளது ஜேட் (மாணிக்க கல்) சுரங்க நிலையம். இங்கு கடுமையாகப் பெய்து வந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். பலர் மாயமாகியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மியான்மர் தீயணைப்புத் துறையினர் தரப்பில், “தற்போது வரை 50 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து கூடுதல் தகவல் இதுவரை வெளியாகவில்லை.
மியான்மர் சுரங்கங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. சுரங்க உரிமையாளர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, விபத்தைத் தவிர்க்கும்படி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மியான்மரில் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுரங்க விபத்தில் 116 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.