

சீனாவின் 59 செயலிகளை இந்தியா தடை செய்ததைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் அவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் அமெரிக்க அரசை வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியா - சீனா இடையேயான எல்லை தாக்குதலைத் தொடர்ந்து 2 நாட்களுக்கு முன்னர் டிக் டாக்மற்றும் யுசி பிரவுசர் என்ற தேடுபொறி உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது.
சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்ததை அமெரிக்காவில் பல தரப்பினர் வரவேற்றுள்ளனர். அமெரிக்காவிலும் சீன செயலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அமெரிக்காவின் தேசியபாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓபிரைன், ‘‘சீன அரசு டிக் டாக் செயலியை அதன் சொந்த காரணங்களுக்காகப் பயன்படுத்தி வருகிறது’’ என்று குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் கூறும்போது, “அமெரிக்காவின் 4 கோடி பேர் டிக்டாக் பயனாளிகளாக இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர்குழந்தைகளும், இளைஞர்களும்தான். அதுமட்டுமல்லாமல் சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீனாவின்கொள்கைகளை விமர்சிப்பவர்களின் கணக்குகள் உடனடியாக நீக்கப்படுகின்றன. ஏற்கெனவே அமெரிக்க காங்கிரஸில் ஃபெடரல் அரசு ஊழியர்கள் டிக் டாக் பயன்படுத்துவதை தடை செய்வதற்கான மசோதா நிலுவையில் இருக்கிறது. தற்போது இந்தியாவில் சீன செயலிகள் தடை செய்யப்பட்டிருப்பதை அடுத்து அமெரிக்காவிலும் தடை செய்தால் என்ன என்ற நிலைப்பாடு அதிகரித்துள்ளது” என்றார்.
ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளபடி டிக் டாக் செயலி சில ஊடுருவல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரலில் ஊடுருவல் நடவடிக்கைகளில் டிக் டாக் ஈடுபடாது என்று உறுதி அளித்ததையும் மீறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
டிக் டாக் அதன் பயனாளிகளின் தரவுகளை சீனாவுக்கு அனுப்புவதாகவும், பயனாளிகள் பயன்படுத்தும் பிற செயலிகளின் விவரங்கள் மற்றும் மொபைலில் உள்ள புகைப்படங்கள், குறுஞ்செய்திகள் போன்றவற்றை டிக் டாக் கண்காணிப்பதாகவும் கூறப்படுகிறது.