

பாகிஸ்தான் விமானங்களை இயக்கும் பைலட்கள் பலர், தேர்வில் மோசடி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து அமைச்சர் கூறும்போது, சுமார் 262 பாகிஸ்தான் பைலட்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கடந்த வாரம் பகிரங்கமாக தெரிவித்தார்.
இதையடுத்து, பாகிஸ்தான் விமானங்கள் ஐரோப்பிய நாடுகளின் வான்வெளியில் பறக்க, ஐரோப்பிய ஒன்றிய வான் பாதுகாப்பு ஏஜென்சி நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
இதுகுறித்து பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறும்போது, ‘‘ஜூலை 1-ம் தேதி முதல் (நேற்று) அடுத்த 6 மாதங்கள் பாகிஸ்தான் விமானங்கள் ஐரோப்பிய நாடுகள் வான்வெளியில் பறக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. அதன்படி, ஐரோப்பிய நாடுகளுக்கு பாகிஸ்தானின் சர்வதேச விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன’’ என்று தெரிவித்துள்ளது.