

ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தைக் குறைக்கும் தேசிய பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் 300க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஹாங்காங்கில் கொண்டு வரும் திட்டத்துக்கு, சீன நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரம் ஒழிக்கப்பட்டுவிடும் என்று விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது ஹாங்காங். எனினும் தன்னாட்சி அதிகாரம் பெற்றதாக உள்ளது. இந்நிலையில், ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையைச் சந்திக்க வைக்க, கைதிகள் பரிமாற்றச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. சீனாவின் நெருக்கடியால் இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுவதாக லட்சக்கணக்கான ஹாங்காங் மக்கள் பல மாதங்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தை ஒடுக்க சீனா தனது படையை அங்கு களமிறக்கியது. இதையடுத்து ஹாங்காங் அரசியலில் சீனா தலையிடுவதை நிறுத்த வேண்டும், சுதந்திரமான தேர்தல், போலீஸாரால் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்தல், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸார் குறித்து விசாரணை மேற்கொள்ளுதல் ஆகிய கோரிக்கைகளோடு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஹாங்காங்கில் கொண்டு வருவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்துக்கு சீன நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் விதித்தன. ஆனால், ஹாங்காங் விவகாரத்தில் உலக நாடுகள் தலையிட வேண்டாம் என்று சீனா பதில் அளித்துள்ளது
இந்த நிலையில் சீனாவால் கொண்டு வரப்பட்டுள்ள தேசிய பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராக ஹாங்காங்கில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இன்று ஹாங்காங்கில் நடந்த போராட்டங்களில் 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் கடுமையான தாக்குதல் நடத்தியதாகவும் பெப்பர் ஸ்ப்ரே அடித்ததாகவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன.