Last Updated : 01 Jul, 2020 09:47 AM

 

Published : 01 Jul 2020 09:47 AM
Last Updated : 01 Jul 2020 09:47 AM

தவறான பாதையில் செல்கிறோம்; அமெரிக்காவில் நாள்தோறும் ஒரு லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்படுவார்கள்: தலைமை தடுப்பு மருத்துவர் எச்சரிக்கை


அமெரிக்க மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பதைப் பார்க்கும்போது, விரைவில் நாள்தோறும் ஒருலட்சம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என்று அச்சப்படுகிறேன் என்று அமெரிக்க கரோனா தடுப்பு தலைமை மருத்துவர் அந்தோனி ஃபாஸி எச்சரி்க்கை விடுத்துள்ளார்

உலகளவில் கரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்டது அமெரிக்காதான். இங்கு இதுவரை 27 லட்சத்து 27 ஆயிரத்து 283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 30 ஆயிரம்பேருக்கும் அதிகமாக உயிரிழந்துள்ளனர். ஏறக்குறைய 11.50 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள பெரும்பலான மாநிலங்கள் லாக்டவுன் கட்டுப்பாடுகளை நீக்கி, இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன. இருப்பினும், சமூக விலகல், முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாகப் பராமரித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகப் பின்பற்றக் கோரி வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், மக்கள் அரசின் அறிவிப்புகளை காற்றில் பறக்கவிடும் வகையில்தான் நாள்தோறும் வலம் வருகிறார்கள். இதனால் மீண்டும் அமெரி்க்காவின் பல்வேறு நகரங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒரு கட்டத்தில் நாள்தோறும் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு குறைந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மீண்டும் பாதிப்பு அதிகரி்த்து, தற்போது நாள்தோறும் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

டெக்ஸாஸ், நியூஜெர்ஸி, கலிபோர்னியா, நியூயார்க்,ஃப்ளோரியா, கனெக்ட்கட் போன்ற நகரங்களில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், அங்குள்ள மதுபான பார்கள் மூடப்பட்டுள்ளன. புதிதாக நகருக்குள் வரும் மக்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இதனால் அமெரிக்காவில் கரோனா வைரஸின் 2-வது கட்ட அலை உருவாகுமோ எனும் அச்சம் படர்ந்துள்ளது. இதுகுறித்து வாஷிங்டனில் சுகாதாரம், கல்வி, தொழிலாளர்கள், ஓய்வூதியம் ஆகியவற்றுக்கான செனட் உறுப்பினர்களின் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கரோனா தடுப்பு தலைமை மருத்துவர் அந்தோனி ஃபாஸி பங்கேற்றார்.

அப்போது செனட் உறுப்பினர்கள் மத்தியில் கரோனா தடுப்பு தலைமை மருத்துவர் அந்தோனி ஃபாஸி பேசியதாவது

“ அமெரிக்காவில் கரோனா வைரஸ் கட்டுக்குள் இருக்கிறதா என்று என்னைக் கேட்டால், தற்போது இருக்கும் சூழலைப் பார்த்து நான் மனநிறைவு அடையவில்லை. நீங்களே பாருங்கள், நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது, வளைகோடு மேல்நோக்கி உயர்கிறது. நாம் தவறான பாதையில் பயணிக்கிறோம்.

இப்போதுள்ள சூழலில் அமெரிக்காவில் கரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் இல்லை. விரைவில் கரோனா வைரஸால் அமெரிக்கா இன்னும் மோசாக பாதிக்கப்படப் போகிறது என்பதை உறுதிபடக்கூறுகிறேன்.

கரோனா வைரஸ் பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ஆனால், மக்கள் அதுகுறித்து சிறிது கூட கவலைப்படாமல் பொது இடங்களில் கூடுவதும், சமூக விலகலைக் கடைபிடிக்காமல் உலாவுவதும், முகக்கவசம் அணியால் செல்வதுமாக இருக்கிறார்கள். முறையான வழிகாட்டுதல்கள் வழங்கியும் எதையும் மக்கள் பின்பற்றுவதில்லை.

இதை நாம் தடுத்து நிறுத்துவிட்டால், நாம் மிகமோசாக பாதிக்கப்படுவோம், மிகப்பெரிய இடரில், துன்பத்தில் சிக்குவோம். கரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இப்போதைக்கு முடியாது. அது வெற்றியடையும் என உறுதியாகக்கூற முடியாது.

இப்போது நாள்தோறும் 40 ஆயிரம் புதிய கரோனா நோயாளிகள் உருவாகிறார்கள். இதேநிலை தொடர்ந்தால் விரைவி்ல நாள்தோறும் ஒரு லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்படுவார்கள் என எச்சரிக்கிறேன், இதைச் செல்ல நான் வியப்படையவும் இல்லை. அமெரிக்காவில் நிலவும் சூழல் எனக்கு மிகவும் கவலையளிக்கிறது.


இவ்வாறு மருத்துவர் ஃபாஸி தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x