

சீனாவில் பன்றியில் கண்டறியப்பட்ட புதிய வைரஸ் மூலம் மனிதர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த வைரஸ் குறித்து தற்போது அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆறு மாதமாக சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸால் உலகின் செயல்பாடே தலைகீழாக மாறியுள்ளது. சுமார் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகள் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் சீனாவில் பன்றியிலிருந்து புதிய வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் புதிய வைரஸ் குறித்து சீன மருத்துவ ஆராய்ச்சிக் குழு கூறும்போது, “மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் பன்றியில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. பன்றிப் பன்ணையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ரத்தத்தில் இந்த வைரஸ் காணப்பட்டுள்ளது. பன்றிப் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட வேண்டும். இந்த வைரஸ் தொடர்பாக கூர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
எனினும் இந்த வைரஸ் குறித்து தற்போது அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
உலக நாடுகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸால் இதுவரை 56,93,461 பேர் குணமடைந்த நிலையில் 5,08,847 பேர் பலியாகி உள்ளனர்.