Last Updated : 30 Jun, 2020 12:44 PM

 

Published : 30 Jun 2020 12:44 PM
Last Updated : 30 Jun 2020 12:44 PM

ராணுவத் தளபதி சுலைமானி கொலை; ட்ரம்ப்பைக் கைது செய்ய ஈரான் நீதிமன்றம் உத்தரவு: உதவி செய்ய இன்டர்போல் மறுப்பு

ஈரானின் போர்ப்படைத் தளபதி குவாசிம் சுலைமானி உள்ளிட்ட ராணுவ வீரர்களை ட்ரோன் மூலம் சுட்டுக் கொலை செய்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட 30 பேரைக் கைது செய்ய ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டு, இன்டர்போல் உதவியை நாடியுள்ளது.

கடந்த ஜனவரி 3-ம் தேதி பாக்தாத்தில் ஈரானின் குவாட்ஸ் படையின் தளபதி குவாசிம் சுலைமானி, துணைத் தளபதி அபு மெஹதி முஹென்திஸ் உள்ளிட்ட ராணுவ வீரர்களை அமெரிக்காவின் ஆள் இல்லா ராணுவ விமானம் குண்டுவீசித் தாக்கியது. இதில் சுலைமானி உள்ளிட்ட முக்கிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள்.

இந்த விவகாரத்தில் பழிக்குப் பழி வாங்குவோம் என்று முழக்கமிட்ட ஈரான் அரசு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை தீவிரவாதியாக அறிவித்தது. மேலும், பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் ஈரான் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது. இதில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் ஈரான் தளபதி சுலைமானி உள்ளிட்ட ராணுவத்தினரைக் கொலை செய்ததில் 40 அமெரிக்க அதிகாரிகளுக்குப் பங்கு உண்டு என்பதை ஈரான் ராணுவம் கண்டறிந்துள்ளது. இதையடுத்து, அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட 40 பேரைக் கைது செய்ய ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பி ஈரான் நாட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதுகுறித்து டெஹ்ரான் அரசு வழக்கறிஞர் அலி அல்குவாஸிமெஹர் கூறுகையில், “ஈரான் தளபதி சுலைமானி உள்ளிட்ட ராணுவத்தினரைக் கடந்த ஜனவரி 3-ம் தேதி பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் ஆள் இல்லா விமானம் மூலம் குண்டுவீசித் தாக்கிக் கொன்றது. இந்தக் கொலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட 40 அமெரிக்க அதிகாரிகளுக்குப் பங்கு இருக்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளோம்.

அதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இன்டர்போல் உதவியையும் நாட ரெட்கார்னர் நோட்டீஸ் வழங்கியுள்ளது. ட்ரம்ப் மீது தீவிரவாதம் மற்றும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

ஆனால், அதிபர் ட்ரம்ப் தவிர மற்றவர்கள் யார் என்பது குறித்து ஈரான் அரசு வெளியிடவில்லை.

இதுகுறித்து இன்டர்போல் வெளியிட்ட அறிக்கையில், “அரசியல்ரீதியாக, மதரீதியாக எந்தவிதமான நடவடிக்கையையும் யாருக்கு எதிராகவும் எடுக்க முடியாது. பொதுவாக இதுபோன்ற கோரிக்கைகளை ஈரான் கருத்தில்கொள்ளாது. இதற்கு உதவ முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x