

கராச்சி நகரில் இயங்கும் பாகிஸ்தான் பங்குச் சந்தை கட்டிடத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் 4 பேர் தாக்குதல் நடத்தினர். ஆனால் பாதுகாப்புப் படையினர் இந்த நால்வரையும் சுட்டுக் கொன்றனர்.
இதில் மேலும் 2 பேர் பலியானதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தில் இன்னும் யாராவது தாக்குதல் நபர்கள் பதுங்கியிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
பல தனியார் வங்கிகள் இயங்கும் மற்றும் உயர் பாதுகாப்பு மண்டலப்பகுதியில் இந்த பாகிஸ்தான் பங்குச்சந்தை இருக்கிறது. இந்நிலையில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள் கையெறி குண்டுகள் வீசியும் மற்றும் துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர்.
“இவர்கள் சில்வர் கரோலா காரில் வந்தனர், இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்” என்று கராச்சி தலைமை காவலதிகாரி குலாம் நபி மெமான் தெரிவித்தார்.
இது தீவிரவாதிகள் கைவரிசையா என்பதை உறுதி செய்யும் விதமாக எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
பங்குச்சந்தை கட்டிடத்தின் வாயிலில் நிற்கும் பாதுகாவலரை நோக்கி முதலில் கையெறி குண்டு வீசினர். பிறகு பாதுகாப்பு முகாம் மீதே தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினரும் சுட்டதில் 4பேரும் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடந்தாலும் பாகிஸ்தான் பங்குச் சந்தை நடவடிக்கைகள் முடக்கப்படவில்லை.
இஸ்லாமிய தீவிரவாதிகள் தவிர பாகிஸ்தான் பலூசிஸ்தானில் பிரிவினைவாதிகளும் உள்ளனர். 2018-ல் கராச்சியில் உள்ள சீன தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பிரிவினை வாதிகளே.
மேலும் இந்த மாதத்தில் ஒரே நாளில் கராச்சியை தலைநகராகக் கொண்ட சிந்த் மாகாணத்தில் பெயர் தெரியாத ஒரு பிரிவினவாதக் குழு நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உட்பட 4 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.