உலக மசாலா: 90 வயது ஓவியர்!

உலக மசாலா: 90 வயது ஓவியர்!
Updated on
2 min read

ரஷ்யாவில் வசிக்கிறார் 90 வயது வலெரி கரமோவ். பள்ளிகளில் ஓவிய ஆசிரியராக வேலை பார்த்த கரமோவ், ஓவியம் தீட்டுவதில் இருந்து ஓய்வு பெறவில்லை. பள்ளியில் காவலராகப் பணிபுரிந்து வரும் கரமோவ், கோடை விடுமுறையில் பள்ளிச் சுவர்கள் முழுவதும் ஓவியங்களைத் தீட்டி விடுகிறார். ‘‘ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை முடிந்து பள்ளி திரும்பும் குழந்தைகளுக்குப் புதிய அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பழைய ஓவியங்களை அழித்து புதிய ஓவியங்கள் தீட்டுகிறேன். என் ஓவியங்களை நின்று ரசிக்காத குழந்தைகளே கிடையாது’’ என்கிறார் கரமோவ். பள்ளியின் 3 தளங்களிலும் 3 விதமான ஓவியங்களைத் தீட்டியிருக்கிறார். முதல் தளம் ‘இயற்கைப் பாதுகாப்பு’ என்ற பொருளில் காடு, மலை, விலங்குகள், பறவைகள் என்று அட்டகாசமாகத் தீட்டப்பட்டிருக்கின்றன.

இரண் டாவது தளம் ‘பூமி பாதுகாப்பு’. ஆறுகள், மலைகள், கடல்கள், காடுகள், சமவெளிகள் என்று இருக்கின்றன. மூன்றாவது தளத்தில் மனிதர்கள் உருவாக்கிய புகழ்பெற்ற கட்டிடங்கள். பிரமிடு, சீனப் பெருஞ்சுவர், தாஜ் மஹால் போன்றவை இடம்பெற்றுள்ளன. சுவர்களில் தூரிகை வைக்கும் வரை, தான் என்ன வரைய வேண்டும், எப்படி வரைய வேண்டும் என்று திட்டமிட்டுக்கொள்வதில்லை.

தூரிகையைப் பிடித்தால் போதும், அதுவே வரைந்துகொள்கிறது என்கிறார் கரமோவ். ‘‘இன்றைய குழந்தைகளுக்கு அவசியமாகத் தெரிந்திருக்க வேண்டியவை இயற்கையும் கலைகளும்தான். எல்லாவற்றையும் ரசிக்கக் கற்றுக்கொண்டால் போதும், உலகம் நல்ல நிலையில் இருக்கும்’’ என்கிறார்.

ஓவியங்கள் மட்டுமல்ல, உங்க சிந்தனையும் அழகு கரமோவ்!

அமெரிக்காவில் வசிக்கிறார் ஷோனா சைபாரி. நான்கு குழந்தைகளின் தாயான ஷோனாவுக்கு நாய்க் குட்டிகள் என்றால் மிகவும் விருப்பம். பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, பணம் கொடுத்து நாய்க் குட்டிகளை வாங்கி வருகிறார். குட்டிகள் பெரிதாகும் வரை அவ்வளவு அன்பாகவும் அக்கறையாகவும் கவனித்துக்கொள்கிறார். நன்றாக வளர்ந்ததும் நாய்க் காப்பகத்தில் நாய்களை விட்டுவிடுகிறார். மீண்டும் நாய்க் குட்டிகளைத் தேடிக் கிளம்புகிறார். ‘‘ரொம்ப விஷமம் செய்கிறது. குப்பையைக் கிளறுகிறது. அடுத்த நாய்களிடம் வம்பு செய்கிறது’’ என்று ஒவ்வொரு நாய்க்கும் ஒவ்வொரு காரணத்தைக் கூறி, காப்பகத்தில் விடுகிறார் ஷோனா. இவரின் செய்கையை விலங்குகள் நல ஆர்வலர்கள் மட்டுமின்றி, குடும்பத்தினரும் எதிர்க்கிறார்கள்.

‘‘நாங்கள் குறும்பு செய்தால் எங்களையும் காப்பகத்தில் விட்டுவிடுவீர்களா?’’ என்று கேட்கிறார் மகள். கணவரோ இனிமேல் ஒரு நாய்க்குட்டி உள்ளே வந்தாலோ, ஒரு நாய் வெளியே போனாலோ விவாகரத்துதான் என்று சொல்லிவிட்டார். ஆனாலும் ஷோனா தன் செயலை வழக்கம் போலச் செய்து வருகிறார். அதற்குக் காரணமும் இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் வளர்த்த இரண்டு நாய்கள் இறந்து போய்விட்டன. அதிலிருந்து அவரால் மீண்டு வர வெகு காலமானது. அதனால் ஆசை தீர குட்டி நாய்களை எடுத்து வளர்க்கிறார். அந்த நாய்களுக்கு ஏதாவது நடப்பதற்குள் காப்பகத்தில் விட்டுவிடுகிறார். ஆனால், ‘‘குட்டி நாய்கள்தான் அழகானவை. ரசிக்க வைக்கக்கூடியவை. நாய்கள் மனிதர்களுக்குச் சிறந்த தோழர்கள். என்னால் நாய்கள் இல்லாமல் ஒருநாள் கூட இருக்க முடியாது’’ என்று சொல்லிக்கொள்கிறார் ஷோனா.

மனித மனம் விசித்திரமானது…

தென்கொரியாவின் தலைநகரில் இருக்கிறது பூப் கஃபே. வெளியில் பார்ப்பதற்குச் சாதாரண கஃபே போலத் தெரிகிறது, ஆனால் உள்ளே ‘கழிவறை’ என்ற பொருளில் ஒவ்வொரு விஷயமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. காபி, தேநீர் குவளைகள் கழிவறை போன்று செய்யப்பட்டுள்ளன. விடுதியின் சுவர், திரைச்சீலைகள், மேஜை விரிப்பு, தலையணை என்று எங்கும் மனிதக் கழிவு வடிவங்கள் காணப்படுகின்றன.

சாப்பிடும் ரொட்டி கூட இந்த வடிவத்தில்தான் கிடைக்கிறது. ‘‘நம் உடலில் இருந்து வெளியேறும் கழிவின் உருவங்களில் உணவுகளைக் கொடுப்பது எந்தவிதத்திலும் மோசமான விஷயம் இல்லை. நுழைந்ததும் முகம் சுளிப்பவர்கள் கூட எங்கள் உணவுகளைச் சுவைத்துப் பார்த்த பிறகு, வாடிக்கையாளர்களாக மாறிவிடுகின்றனர். எந்த வடிவத்தில் இருந்தாலும் உணவு உணவுதான். அதைச் சாப்பிடுவதில் என்ன தயக்கம்? இதைப் புரிந்துகொண்டவர்கள் இங்கே வந்தால் போதும்’’ என்கிறார் உரிமையாளர்.

என்ன சொன்னாலும் கொஞ்சம் ஒருமாதிரியாத்தான் இருக்கு…

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in