

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது என வேர்ல்டோ மீட்டர் கணக்கின்படி தெரிவி்க்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதாவது நான்கில் ஒருபங்கு பாதிப்பு அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அடுத்த 6 மாதத்துக்குள் உலகளவில் ஒரு கோடி பேர் இந்த கொடூர வைஸின் பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர்.
வேர்ல்டோ மீட்டர் கணக்கின்படி, உலகளவில் கரோனாவில் பாதி்க்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 82 ஆயிரத்து 618 ஆக உள்ளது. இதில் குணமடைந்தோர் எண்ணிக்கை 54 லட்சத்து 58 ஆயிரத்து 523 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளது.
கோடை காலத்தில் கரோனா வைரஸின் தாக்கம் குறையும் என்று கூறப்பட்ட நிலையில் ஜூன் மாதத்தில்தான் இதுவரை இல்லாத அளவாக நாள்தோறும் 1.25 லட்சம் பேர் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த கரோனா பாதிப்பான ஒருகோடியில் மூன்றில் இரு பங்கு மே மற்றும் ஜூன் மாதங்களில்தான் இருந்துள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன
கடந்த மார்ச் மாதம் 1.90 லட்சம் பேர் உலகளவில் உயிரிழந்திருந்தார்கள், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் மார்ச் மாதம் கரோனா பாதிப்பும், உயிரிழப்பும் உச்சத்தில் இருந்தது, அமெரிக்கா கிடுக்கிப்பிடியில் சிக்கித் தவித்தது. அதன்பின் உலகில் பல நாடுகளிலும் மே, ஜூன் மாதங்களில் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்ததையடுத்து ஒரு கோடியை எட்டியுள்ளது.
உலகில் மொத்தம் 38 நாடுகள் கரோனா பாதிப்பிலிலுருந்து மீண்டுவிட்டன, சில நாடுகள் மீளும் தருவாயில் இருக்கின்றன. இதில் சில சிறிய தீவு நாடுகளான துவாலு, வனுவாட்டு, சாலமன்தீவுகள், நியூஸிலாந்து போன்றவை அடங்கும். இலங்கை, பூடான் நாடுகளும் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன.
அந்த வகையில் அமெரிக்கா கரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வின்படி அமெரிக்காவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்துள்ளது.
அமெரி்க்காவில் இதுவரை 25 லட்சத்து 96 ஆயிரத்து537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 28 ஆயிரத்து152 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் மீண்டும் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 43 ஆயிரம்பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்
ப்ளோரிடா, ஜார்ஜியா, சவுத் கரோலினா, நிவேடா ஆகிய மாநிலங்களில் மீண்டும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ப்ளோரிடாவில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்ட பின் நேற்று அதிபட்சமாக 10 ஆயிரம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின் இளைஞர்கள் சமூக விலகலைக் கடைபிடிக்காமலும், முகக்கவம் அணியாமலும் வலம்வருவதால் இந்த பாதிப்பு அதிகரித்துள்ளது
தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், பெரு, சிலி ஆகிய நாடுகளிலும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்த 3 நாடுகளிலும் சேர்த்து 20 லட்சத்துக்கும் அதிகமான கரோனா நோயாளிகள் உள்ளனர். இதில் பிரேசிலில் மட்டும் 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 55 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்